அதிமுக இறுதி வேட்பாளர் பட்டியல்? இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆலோசனை.!
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
சட்டமன்ற தேர்தலில், கூட்டணி கட்சிகளுடன், தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. மேலும், வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இருதரப்பிலும், பலகட்டங்களாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. தேமுதிகவுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினர். தேர்தல் அறிக்கை தயாரிக்க அதிமுகவில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழு, தனது வரைவு தேர்தல் அறிக்கையை இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.சிடம் சர்மப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை பரிசீலித்து தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணியையும் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் உட்பட 13 சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தன.
Comments