ரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமாம்..! பாலையா ஆக்ஷன் பிளாக்

0 11162
ரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமாம்..! பாலையா ஆக்ஷன் பிளாக்

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, அனுமதியின்றி தன்னுடன் இருப்பது போன்று செல்பி எடுத்த ரசிகரின் கன்னத்தில் பளார் விட்ட தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா , மீண்டும் ஒரு பளார் விட்டு அந்த போட்டோவை அழிக்க வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஆளில்லா ரெயிலோ, ஆகாய விமானமோ எதுவாக இருந்தாலும் கிராபிக்ஸ் மகிமையால் சும்மா அசால்ட்டா டீல் செய்வது தான் தெலுங்கு தேச எம்.எல்.ஏ பாலையாவின் சினிமா ஆக்சன்..!

சினிமாவில் மலை உச்சியில் உயிருக்கு போராடும் முயலை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் ஜீவ காருண்ய சீலராக நடித்துள்ள பாலகிருஷ்ணா நிஜத்தில் அதீத கோபக்காரர்..! என்று கூறப்படுகின்றது.

கூட்டத்திற்குள் சிக்கினால் இவரிடம் அடிவாங்காத ரசிகர்களே இல்லை எனலாம், அந்த அளவிற்கு அவ்வப்போது ரசிகர்களை தாக்கி 60 வயதானாலும் தன்னை ஒரு ஆக் ஷன் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டுள்ள பாலகிருஷ்ணா, தற்போது ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இந்துபூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

ஆந்திராவில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா, சனிக்கிழமை காலை ராஜா என்ற தெலுங்குதேசம் கட்சி பிரமுகர் வீட்டிற்கு சென்றார். பாலகிருஷ்ணாவை பார்த்த பரவசத்தில் ராஜாவின் சகோதரரான சோமு தன் செல்போனை எடுத்து தூரத்தில் நின்று செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது.

இதை கவனித்த நடிகர் பாலகிருஷ்ணா, எலியை பார்த்து காண்டாகும் சுந்தரா டிராவல்ஸ் வடிவேலுவை போல பாய்ந்து சென்று சோமுவின் செல்போனை தட்டிவிட்டு அவரின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டுள்ளார்.

அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத பாலையா, செல்போனில் உள்ள தனது புகைபடத்தை அழிக்க கூறி மீண்டும் ஒரு பளார் அறை விட்டதால், சோமு சோகமானார்.

விருந்துக்கு அழைத்த கட்சி பிரமுகரின் தம்பிக்கே கன்னம் பழுக்க விருந்து வைத்து திரும்பிய பாலையாவின் இந்த ஆக்சன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. ரசிகராக இருக்கும் பாவத்திற்காக பாலையாவை வீட்டுக்கு அழைத்து அடிவாங்குவதே அவர்களது ஆதரவாளர்களுக்கு வேலையாக போய்விட்டது என்று எதிர்க்கட்சிகள் கேலி செய்தனர்.

இதையடுத்து அடி தாங்கி சோமுவிற்கு, தெலுங்குதேசம் கட்சியின் சால்வையை போர்த்தி, தான் நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகர் என்றும் அவரது கைகள் என் மீது பட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பேசவைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் தலைவனாகும் ஆசையில் இருக்கும் அரசியல் வாரிசுகள் பொறுமை காக்க தவறினால் சமூக வலைதளங்களில் வசைபட நேரிடும் என்பதற்கு நம்ம பாலையாவே அனைவருக்கும் பால பாடம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments