மீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..! ஒருவாரமாக நிற்பதால் பரவசம்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள கருநெல்லி நாதர் ஆலயத்தில் உள்ள மீனாட்சியம்மன் சிலையின் தோளில் அமர்ந்து பச்சைக்கிளி ஒன்று தவம் செய்து வருவது பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறது.
பாண்டிய மன்னனின் மகளாக அவதரித்து மதுரையை ஆண்டதாக பக்தர்களால் வணங்கப்படும் மீனாட்சி அம்மனின் சிலை மற்றும் ஓவியங்களில் அம்மனின் தோளில் பச்சை கிளி ஒன்று இடம் பெற்று இருக்கும்..!
அந்த கிளி மீனாட்சி அம்மனின் தோளில் இருப்பதற்கு இரு வேறு கதைகள் சொல்லப்படுகின்றது, பறக்க இயலாததால் பசியால் தவித்த கிளியொன்று அடைக்கலம் கேட்டு அன்னையை நோக்கி தவமிருந்ததாகவும், அதனை அரவணைத்து தனது தோளில் அன்னை நிறுத்திக் கொண்டார் என்று ஒரு கதையும், பக்தர்கள் அன்னையிடம் வைக்கும் வேண்டுதலை தக்க நேரத்தில் திரும்ப திரும்ப அன்னையிடம் எடுத்துச்சொல்லி நிறைவேற்றி தரவே அந்த பச்சைகிளியை அன்னை தோளில் நிறுத்தி உள்ளார் என்றும் இரு விதமான புராணக்கதைகள் சொல்லப்படுகிறது.
இந்த புராணக்கதை விருது நகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள கருநெல்லிநாதர் ஆலயத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நிஜ காட்சி ஆனதால் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். அங்குள்ள மீனாட்சி அம்மனின் சிலையின் வலப்பக்கத்தில் அம்சமாக அமர்ந்திருக்கும் அந்த பச்சை கிளியை கண்டு பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக இந்த கோவிலில் காணப்படும் இந்த பச்சைக்கிளியானது , அம்மனுக்கு அபிசேகம் முடிந்து அலங்காரம் செய்ததும் எங்கிருந்தாலும் பறந்து வந்து சிலை மீது கச்சிதமாக அமர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது.
பக்தர்களை கண்டோ, பூஜை செய்யும் குருக்களை கண்டோ, அஞ்சாமல் அப்படியே நாள் முழுவதும் தவகோலத்தில் நிற்பதாக இந்த காட்சியை நேரில் பார்த்த பக்தர்கள் தெரிவித்தனர்.
தங்கள் கோரிக்கையை அம்மனிடம் கொண்டு சேர்க்க இந்த பச்சைகிளி வந்திருப்பதாக பக்தர்கள் அகம் மகிழ்ந்தாலும், பச்சை கிளியின் பசிக்கு இனி அம்மனின் பெயரால் தடையின்றி உணவு கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..!
அதே நேரத்தில் வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பச்சை கிளி மட்டுமல்ல, காக்கை குருவிகளுக்கும், கொஞ்சும் மைனாக்களுக்கும் தாகம் தீர்க்க சிறிய பாத்திரத்தில் நீர் வைக்க வேண்டியது அவசியம்..!
Comments