தென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்துவர்..!

0 58951
தென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்துவர்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்து கொள்ள தென்னந்தோப்பில் ரகசியமாக இயங்கி வந்த ஸ்கேன் மையத்தை மருத்துவ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதையும், ஏன் குறைந்து வருகிறது என்பதையும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குனரக அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் ஸ்கேன் மையம் செயல்பட்டு வருவதாகவும், அதில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியப்பட்டு வருவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து 7 மாத கர்ப்பிணி ஒருவரை உதவிக்கு அழைத்த ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குனரக அதிகாரிகள் அவரிடம் செல்போனைக் கொடுத்து அதில், மொபைல் ட்ராக்கர் வசதியையும் செய்து கொடுத்து தென்னந்தோப்புக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அறியாத ஸ்கேன் மையத்தின் இடைத்தரகரும் வாகன ஓட்டுநருமான இளவரசி என்பவர் கர்ப்பிணியை அழைத்துச் சென்று, அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதைக் கண்டறிய சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வைத்தார். பின்னர் தென்னந்தோப்புக்குள் அழைத்துச் சென்றதும், செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுமாறு கூறிய ஸ்கேன் மையத்தில் இருந்த போலி மருத்துவர் சுகுமாறன், அந்தப் பெண்ணை சோதனை செய்து கருவில் இருப்பது ஆண் குழந்தை என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் செல்போனை ஆன் செய்த அந்தப் பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றொரு இடைத்தரகரான சதீஷ் குமாரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். ஆனால் இளவரசியும், போலி மருத்துவர் சுகுமாறனும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பிடிபட்ட சதீஷ் குமார் கந்திலி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments