மக்கள் நீதி மையத்தின் புது முகம்... யார் இந்த அனுஷா ரவி?

0 9785
பார்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்கள் நீதி மைய கட்சியில் புதுமுகமாக நுழைந்திருக்கிறார் கல்வியாளராக அறியப்பட்ட கோவையை சேர்ந்த அனுஷா ரவி.

கல்வியாளர்களை, தொழில் முனைவோர்கள் தன் கட்சிக்கு இழுத்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அந்த வகையில் சமீபத்திய என்ட்ரி அனுஷா ரவி. கோவையின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான பார்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி இவர். இதுவரை, அரசியலில் எந்த அனுபவமும் இல்லாத அனுஷா ரவி, மக்கள் நீதி மையத்தின் தலைமை நிலைய பரப்புரையாளராக செயல்படப் போகிறார். கோவையை பொறுத்த வரை, சிறந்த கல்வியாளர், சிறந்த நிர்வாகியாக அறியப்பட்டுள்ள அனுஷா ரவி அரசியலில் எப்படி நீந்தப் போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனிவே, அனுஷா ரவி யார் ... அவர் இந்த சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறார் என்று பார்க்கலாம்.

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸில் அனுஷா ரவி பி.இ பட்டம் பெற்றார். அமெரிக்காவிலுள்ள ஓல்டு டொமினியன் பல்கலையில் மாஸ்டர் டிகிரியும் நெல்லை மனோன்மனியம் பல்கலையில் டாக்டர் பட்டமும் பெற்றவர். அமெரிக்காவில் ஏர்பஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான On Air நிறுவனத்தில் சீனியர் சிஸ்டம் இன்ஜீனிய ராக பணியாற்றினார். முன்னதாக, Anheuser Busch நிறுவனத்தில் புரோஜக்ட் மேனஜராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர், 2007 ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய அனுஷா ரவி, தந்தை நடத்தி வந்த பார்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அனுஷாவின் நிர்வாகத்திறமையால் தற்போது கோவை, திருப்பூர், சென்னை நகரங்களில் இன்ஜீனியரிங், ஏரோநாட்டிக்கல் சயின்ஸ், கலைக்கல்லூரிகள், நர்ஸிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி , இன்டர்நேஷனல் முதல் நர்சரி பள்ளிகள் பார்க் குழுமம் நடத்தி வருகிறது. ஆண்டுக்கு 20,000 மாணவர்கள் பார்க் கல்வி நிறுவனங்களில் இருந்து படித்து வெளியே வருகின்றனர். இந்த நிறுவனங்களில் 1,500 பேர் பணி புரிகின்றனர்.

கோவையை பொறுத்த வரை அனுஷா ரவியின் முகம் நன்கு பரிச்சயம். பன்முக திறமை கொண்ட அனுஷா சத்தமில்லாமல் சமூக வளர்சிக்காக பணியாற்றி கொண்டிருந்தவர்தான். அதில், அனுஷா ரவி உருவாக்கிய அரவணைப்பு என்ற அமைப்பு மிக முக்கியமானது . என்.ஆர்.ஐ க்களின் பங்களிப்புடன் ஆதரவற்ற குழந்தைகளின் தொடக்க கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை இந்த அமைப்பு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் இந்த அமைப்பால் படிக்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25,000 குழந்தைகளை படிக்க வைத்து விட வேண்டுமென்ற இலக்குடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

அனுஷா ரவி இதுவரை பயணித்த களம் வேறு. திடீரென்று அரசியலுக்குள் குதித்திருக்கிறார். என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments