சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 10ந் தேதி வெளியிடப்படும் என தகவல்

0 2607
சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 10ந் தேதி வெளியிடப்படும் என தகவல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், வரும் 10ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. மற்றொரு புறம் தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, திடீரென திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டு, காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க உரையாற்றிய மு.க.ஸ்டாலின், வரும் 10ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தொடர்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சார வியூகம், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடுகள் நடைபெற்று வரும் நிலையில், எந்தெந்த தொகுதிகளை வழங்குவது என்பது குறித்தும் இதில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதேசமயம், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடும் 10 ஆண்டு தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியில் நாளை மறுநாள் நடைபெறும், தமிழகத்தின் "விடியலுக்கான முழக்கம்" என்று பெயரிடப்பட்டுள்ள பொதுக்கூட்டம் காலை 7 மணிக்குத் துவங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 80 வயது மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் - நோயுற்றவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறைகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments