சென்னையில் 20 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெட்டிக் கொலை; தப்பி ஓடிய 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

0 31468
சென்னையில் 20 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெட்டிக் கொலை; தப்பி ஓடிய 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சிவா வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சிவா. மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியைச் சேர்ந்த ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பணவரவு தொடர்பாக கடந்த 4 நாட்களாக அங்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு போஸ்டல் காலனி பகுதிக்கு வந்திருந்த சிவாவை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்கினர்.

தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சிவாவை சரமாரியாக வெட்டியதில் முகம் மற்றும் தலை சிதைந்து நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனைத் தடுக்க வந்த சிவாவின் கூட்டாளிகள் 3 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தகவலறிந்த அசோக் நகர் போலீசார் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

சிவாவின் கொலைக்கு மற்றொரு ரவுடி அழகு ராஜாவின் கூட்டாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் தோட்டம் சேகர் என்ற ரவுடிக்கும், சிவாவுக்கும் முன் விரோதம் காரணமாக பகை இருந்துள்ளது. இதனால் சிவா கும்பலால் தோட்டம் சேகர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பழிவாங்க, தோட்டம் சேகரின் மகனான அழகுராஜா, ரவுடி சிவாவை பலமுறை கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. எனவே, சிவாவின் கொலைக்கு அழகுராஜா காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சிவா மீது இரட்டைக் கொலை வழக்கு, ஆட்கடத்தல், கொலை முயற்சி என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் பிரிவில் இருந்த சிவா, சமீபத்தில் ஒரு பெண்ணை வீட்டுக்குள் தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்த சிவா, மேற்கு மாம்பலத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்த நிலையில்தான் சிவாவை பின்தொடர்ந்த கொலையாளிகள் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

வழக்கமாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், நகரில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் ஏ-பிளஸ் பிரிவில் இருந்த சிவாவை சிறையில் அடைக்காமல் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதே படுகொலைக்கு காரணமாக அமைந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே இரு சக்கர வாகனத்திலும், ஆட்டோவிலும் பயங்கர ஆயுதங்களுடன் வந்திறங்கிய  கொலைக் கும்பல்  ரவுடி சிவக்குமாரை, வெட்டி சாய்த்துவிட்டு தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments