ஆறு மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுத்துள்ளது கொரோனா..! புதிய வழிகாட்டு விதிகளை அறிவித்தது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
தமிழகம் உள்ளிட்ட ஆறுமாநிலங்களில் கொரோனா வேகம் எடுத்திருப்பதால் மத்திய அரசு வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், மால்களுக்கு புதிய வழிகாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் மற்றும் மால்களுக்கான புதிய கொரோனா கால வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முகக் கவசம் அணிவதும் தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பதும் இதில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மால்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருமே கொரோனா தொற்று பரவல் பாதிப்புக்குரிய அபாயகரமான சூழலில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று பரவக்கூடிய பணிகளில் உள்ள ஊழியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சரக்குகள் கொண்டு வர தனி வாயில் அமைக்கவும் உள்ளே நுழையவும் வெளியேறவும் தனி வாயில்கள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.உணவகங்களில் சாப்பிடுவோரை விடவும் உணவு பார்சல்கள் டெலிவரி முறையை ஊக்கப்படுத்துமாறும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்க்கிங் போன்ற இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதே போல் வழிபாட்டுத் தலங்களிலும் கூட்ட நெரிசலைத் தவிர்த்தல், சானிட்டைசர் சோப்பு போன்றவற்றைப் பயன்படுத்துதல், நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டும் அனுமதித்தல் போன்ற நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
தமிழகம், கேரளா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்து பரவி வருகிறது. இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.
Comments