அட்வகேட் ஜெனரலிடம் பணம் பறிக்க முயற்சி ஆறே மாதத்தில் தீர்ப்பு..! விரைவான வழக்கு விசாரணை

0 4825
அட்வகேட் ஜெனரலிடம் பணம் பறிக்க முயற்சி ஆறே மாதத்தில் தீர்ப்பு..! விரைவான வழக்கு விசாரணை

முன்னாள் அட்வகேட் ஜெனரலிடம், உச்ச நீதிமன்ற நீதிபதியின் மகன் எனக்கூறி 20 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ய முயன்றவரின் வழக்கை விரைவாக விசாரித்து 5 மாத கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புகார்தாரர் முன்னாள் அட்வகேட் ஜெனரல் என்ற நிலையில், 45 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் 6 மாதத்தில் இந்த வழக்கை விரைந்து முடித்துள்ளனர்.

தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரலாக பொறுப்பு வகித்தவர் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன்.

இவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ந்தேதி வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளான்.

தான் சென்னைக்கு அலுவல் தொடர்பாக வந்திருப்பதாகவும் செலவுக்கு 20 ஆயிரம் ரூபாய் தந்து உதவுமாறும், தான் டெல்லிக்கு போய் பணத்தை திருப்பி அனுப்பி வைத்து விடுவதாகவும் கூறி குறுந்தகவல் அனுப்பியுள்ளான்.

இதனை நம்பிய பி.எஸ். ராமன் பணம் கொடுப்பதற்கு முன்பாக சாமர்த்தியமாக, தனக்கு குறுந்தகவல் அனுப்பியது போல உண்மையிலேயே நீதிபதியின் மகன் உள்ளாரா ? என்று டெல்லி வழக்கரிஞர் வட்டாரத்தில் விசாரித்துள்ளார்.

இதில் அந்த நபர் போலியான ஆசாமி என்பது தெரியவந்ததையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை கொண்டு பி.எஸ் ராமனிடம் பணம் பறிக்க முயன்ற நபரான மேற்கு வங்கத்தை சேர்ந்த அபராஜித் பசாக் என்பவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிக்கையை 45 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

எழும்பூர் குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியங்களையும் தகுந்த ஆவணங்களையும் ஆதாரங்களாக சமர்ப்பித்ததோடு, அபராஜித் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி ஏமாற்ற முயன்றதை உறுதி செய்ததை சைபர் கிரைம் போலீசார் நிரூபித்தனர்.

இதையடுத்து அபராஜித் பசாக்கிற்கு 5 மாத கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆறே மாதத்தில் இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிந்து தண்டனை வழங்க விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குறியது.

அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் போதிய சாட்சியங்கள் இன்றியும், ஆதாரங்கள் இல்லாமலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அவற்றையும் இதே போல விரைந்து விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments