கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக நடவடிக்கை..! ம.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

0 3741
கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக நடவடிக்கை..! ம.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் விரைவில் தொகுதிப் பங்கீட்டை முடிக்க தி.மு.க. தலைமை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் நேற்று தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் தெரிவித்தார். ஏதேனும் 2 பொது தொகுதிகளும் 4 தனி தொகுதிகளும் விசிக கேட்பதாக கூறப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தி.மு.க.வுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் முத்தரசன், இன்றைக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றார்.

திமுக - மதிமுக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. திமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ம.தி.மு.க. நிர்வாகிகள் வைகோவுடன் ஆலோசனை நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. திமுக 6 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தரப்பில் 40க்கும் அதிகமான தொகுதிகளை கேட்பதாக கூறப்படும் நிலையில், திமுக தரப்பில், 30 தொகுதிகளுக்குள்ளாக ஒதுக்கீடு செய்ய பேச்சுவார்த்தை தொடர்வதாக கூறப்படுகின்றது. இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. மேலிட பொறுப்பாளர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்த முடிவு இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments