6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்... சாதனை படைத்தார் அதிரடி ஆட்டக்காரர் கெய்ரன் போல்லார்ட்!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெய்ரன் போல்லார்ட் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் ((Coolidge Cricket Ground)) புதன்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பெளலிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயா அணியின் நான்காவது ஓவரை அவர் வீசியபோது, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தது மேற்கிந்திய தீவுகள் அணி.
அப்போது தான் அணியின் ஆபத்வாந்தனாக களமிறங்கினார் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கேப்டன் போல்லார்ட். அணியின் ஆறாவது ஓவரை வீசவந்த அகிலா தனஞ்செயாவின் ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி அனைவரையும் அசரவைத்தார் போல்லார்ட். அதிரடியாக விளையாடிய போல்லார்ட் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இரு சாதனைகள் படைக்கப்பட்டன. தனஞ்செயா வீசிய 6-வது ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை போல்லார்ட் பெற்றார். இதற்கு முன்பு கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலககோப்பை ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர் கிப்ஸும், 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங்கும், 6 பந்தில் 6 சிக்சர் அடித்து இருந்தனர்.
அதே வேளையில் சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 15 வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயா. ஆனால், அவரது அடுத்த ஓவரிலேயே தன்னுடைய அதிரடியான சிக்ஸர்களினால் தனஞ்செயாவின் மொத்த மகிழ்ச்சியையும் சிதைத்துவி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கெய்ரன் போல்லார்ட்.
Comments