திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள்..! தனிச் சின்னத்தில் போட்டி
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இடதுசாரிகள், மதிமுக ஆகிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் பேசிய திருமாவளவன், 6 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் வி.சி.க. வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றார்.
திமுக கூட்டணியில் செய்யூர், உளுந்தூர்பேட்டை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி, காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி, வானூர் , சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளில் இருந்து 6 தொகுதிகளை ஒதுக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏதேனும் 2 பொது தொகுதிகளும் 4 தனி தொகுதிகளும் விசிக தரப்பு திமுகவிடம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில், திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து 2வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றார்
இதனிடையே திமுக - மதிமுக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இழுபறி நீடிக்கிறது. திமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மீண்டும் எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில், வருகிற 6 ஆம் தேதி சென்னையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. திமுக 6 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments