திமுக 3வது நாள் நேர்காணல்: 12 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு
திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 3ஆவது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.
தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து திமுகவின் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. 3-வது நாளான இன்று, விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இணைந்து நேர்காணல் நடத்தி வருகின்றனர். நேற்று விடுபட்ட கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு முதலில் நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து தருமபுரி, நாமக்கல், சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது.
கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இன்று மாலை நேர்காணல் நடத்தப்பட உள்ளது. தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது, கடந்த முறை கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் இம்முறை திமுக போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பன உள்ளிட்ட கேள்விகள் நேர்காணலில் கேட்கப்படுகின்றன.
Comments