அரிசிராஜாவாக உள்ளே சென்றார்... ' சமத்து 'முத்துவாக வெளியே வந்தார்!

0 4909
கூண்டை விட்டு வெளியே வந்த அரிசிராஜா

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிசி ராஜா யானை இப்போது முத்து என்ற புது பெயருடன் பயிற்சி முடித்து கூண்டை விட்டு வெளியே வந்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்த நாரிபாளையம் சுற்றுவட்டார மலைப்பகுதி கிராமங்களில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒற்றை காட்டு யானை நடமாடி வந்தது. ஊருக்குள் புகுந்து வீடுகள், கடைகளை உடைத்து அரிசி, காய்கறி வகைகளை சாப்பிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டது. அரிசி மூட்டைகளை தேடி பிடித்து விரும்பி உண்டதால், மக்கள் அரிசிராஜா என்று பெயர் சூட்டினர். சாப்பாட்டு ராமன் என்றும் பெயர் வைத்து அழைத்து வந்தனர். இந்த யானை அந்த பகுதியை சேர்ந்த பெண் மற்றும் விவசாயி ஒருவரை மிதித்து கொன்றது . 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி அர்த்தநாரிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்த இந்த யானை விவசாயி ஒருவரை கொன்றது.

தொடர்ந்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தய யானையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். வனத்துறையினர் அரிசி ராஜா யானையை கலீம், கபில் என்ற கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர். பின்னர் அந்த யானையை டாப்சிலிப் வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானையை கூண்டுக்குள் அடைத்து வைத்து கும்கி யானை பயிற்சி வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகு இப்போது அரிசி ராஜா யானை சமத்தாக மாறி விட்டது. பாகன்கள் உருது மற்றும் தமிழ் கலந்து கொடுக்கும் 42 வகை கட்டளைக்கு அடி பணிந்து அரிசிராஜா யானை நடக்கிறது. இரண்டாண்டு பயிற்சிக்கு பிறகு காட்டு யானை பாகன்களின் கட்டுப்பாட்டுக்கு வந்ததால் யானையை கூண்டிலிருந்து வெளியேற்ற வனத்துறை முடிவு செய்தனர்.தற்பொழுது இன்று அரிசி ராஜா யானையை கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து, கூண்டை விட்டு வெளியே வந்த அரிசிராஜா, பானையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை தும்பிக்கை வழியாக பீய்ச்சி அடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வரகளியாறு முகாமில் மொத்தம் 27 யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானைக்கும் நாங்கள் பெயர் வைப்பது வழக்கம். அரிசிராஜா என்பது பொதுமக்கள் வைத்த பெயர் என்பதால் இந்த யானைக்கும் வேறு பெயர் வைக்க முடிவு செய்தோம். இதற்காக 10 பெயர்களை தேர்வு செய்து தலைமை வன பாதுகாவலருக்கு அனுப்பினோம். இந்த 10 பெயர்களில் ஒரு பெயரை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று கூறி விட்டதால், அதன்படி அரிசிராஜா யானைக்கு முத்து என்று பெயர் சூட்டினோம் என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments