திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்

0 5232
திமுக-விடுதலைச் சிறுத்தைகள் இன்று மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 பொதுத் தொகுதிகள் உள்ளிட்ட 7 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இரு கட்சிகளிடையே இன்று மீண்டும் நடைபெறும் பேச்சில் உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இதேபோல, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இன்று மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பதால், காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளோடு பின்புலப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேற்று 2பொதுத் தொகுதிகள் 4 தனித் தொகுதிகள் என 6 தொகுதிகள் வழங்க திமுக முன்வந்தது. ஆனால் இதனை ஏற்க விசிக மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்று பின்புலப் பேச்சுவார்த்தையில் 5 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் என 7 தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாகவும், இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உடன்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, பிற்பகலில் இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுக்கள் கலந்தாலோசித்த பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உடன்பாடு எட்டப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இதேபோல, தலா 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளையும், இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைத்துள்ளது. இதை முன்னிட்டு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் அலுவலகங்களில் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன. பின்னர் இரு கட்சிகளும் கூட்டாக ஆலோசனை நடத்த உள்ளன. தொடர்ந்து இன்று மாலை திமுக-இடதுசாரிகள் இடையே நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதனிடையே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில், அண்ணா அறிவாலயம் வந்து, தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசியல் உறவுகள் இருப்பதால், அதிக உரிமைகளை எதிர்பார்ப்பதே, உடன்பாடு எட்டுவதில் தாமதம் ஏற்படக் காரணம் என ஈஸ்வரன் தெரிவித்தார். இதனிடையே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 5 தொகுதிகள் கோரும் நிலையில் 2 அல்லது 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யலாம் என கூறப்படுகிறது.

இதேபோல, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இன்று மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது. இதை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லகண்ணு, எம்.பி. சுப்ராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை குழு, அண்ணா அறிவாலயம் சென்று பேச்சு நடத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவும் இன்று மாலை அண்ணா அறிவாலயம் சென்று பேச்சு நடத்த உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநிலப் பொறுப்புகளில் உள்ள மூத்த நிர்வாகிகளிடம் தினேஷ் குண்டுராவ் தனித்தனியே கருத்துக்களை கேட்டறிந்துள்ளார். மாவட்ட வாரியாக காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மற்றும் தேர்தல் செலவு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வந்த  நிலையில் 22 தொகுதிகள் வரை ஒதுக்க தயார் என திமுக தரப்பில் கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments