2 மனைவிகள் 2 காதலிகள் 5 வதாக பள்ளி மாணவி..! போக்சோவில் சிக்கிய சில்வண்டு
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஏற்கனவே 2 மனைவிகள், 2 காதலிகள் என சுழற்சி முறையில் குடித்தனம் நடத்தி வந்த 25 வயது இளைஞர் 5ஆவதாக பள்ளி மாணவியை கடத்திச்சென்றதால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஜீன்ஸ் பேண்டும், கருப்பு சட்டையும் போட்டுக் கொண்டு, புதுப்பொண்ணு போல தலை கவிழ்ந்தபடியே போலீஸ் பாதுகாப்புடன் வரும் இவர் தான் கிராமத்து மைனர் ஸ்டீபன்..!
10ஆம் வகுப்பு படிக்கின்ற தனது மகளை காணவில்லை என்று பணகுடி காவல் நிலையத்தில் மாணவி ஒருவரின் தாய் புகார் அளித்தார் ..!
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்த வேலையை செய்து கொண்டு, கிராமத்தில் மைனர் போல வலம் வந்த பணகுடி அடுத்த கலந்தபனை புதூரை சேர்ந்த 25 வயதான ஸ்டீபன் என்பவன் கடத்திச்சென்று இருப்பது தெரியவந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்து ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்த ஸ்டீபன், அவர்களுக்கு தெரியாமல் மேலும் இரண்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் தனி தனியாக குடித்தனம் நடத்தி வருவதையும் செல்போன் தொடர்புகள் மூலம் கண்டறிந்தனர்.
இந்த நிலையில் தான் ஸ்டீபனின் காதல் வலையில் 10ஆம் வகுப்பு படிக்கின்ற அந்த மாணவி சிக்கி இருப்பதும், மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்த ஸ்டீபன், வீட்டில் பெற்றோர்கள் இல்லாத சமயங்களிலும் மாணவியை தனிமையில் சந்தித்துள்ளார். இந்த விவரம் மாணவியின் வீட்டுக்கு தெரிய வந்ததும், ஸ்டீபன் அந்த மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
போலீசார் இவர்களை தேடி வந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள மலைப்பகுதியில் மாட்டு பண்ணை ஒன்றிற்கு மாணவியை அழைத்துச்சென்ற ஸ்டீபன், மாட்டுச் சாணம் அள்ளும் வேலை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த காவல்துறையினர் ஸ்டீபனை சுற்றிவளைத்து அவனது கட்டுப்பாட்டில் இருந்த மாணவியை மீட்டனர். அவர்கள் இருவரையும் பணகுடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
குரங்கு, மரம் விட்டு மரம் தாவுவது போல ஏற்கனவே குடித்தனம் நடத்திய 4 பெண்களையும் தவிக்க விட்டு 5ஆவதாக பள்ளி மாணவியை மயக்கிய மன்மத ராசா ஸ்டீபன் மீது சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்தத வழக்குடன் போக்சோ சட்டமும் பாய்ந்தது.
கொரோனா சோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருஞ்சட்டை காதல் பறவை தற்போது ஜெயிலுக்குள் கம்பி எண்ணும் சிறை பறவையாக அடைக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் படிக்கின்ற வயதில் இது போன்ற புள்ளிராசாக்களை நம்பி காதலில் விழுந்தால் மாணவிகளின் படிப்பு கெட்டுபோவதோடு, வாழ்க்கையே வீணாகும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.
Comments