புற்றுநோய் பாதித்த நிலையிலும் மாற்றுத்திறனாளி மகனுக்காக உழைக்கும் தாய்!- சொந்த செலவில் பிரத்யேக டூ வீலர் வாங்கிக் கொடுத்த ஆட்சியர்

0 3504
பழனிகுமாரை அமரவைத்து ஓட்டிக் காட்டிய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன்

மதுரையில் மனவளர்ச்சி குன்றிய இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தனது சொந்த செலவில் இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வழங்கியுள்ளார்.

மதுரை ஆனையூர் பகுதி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர்கள் காளிமுத்து-மாரீஸ்வரி தம்பதியினர். இவர்களின் ஒரே மகனான 21 வயது நிரம்பிய பழனிகுமார் பிறவியிலிருந்தே மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார். காளிமுத்து கட்டட வேலைக்கு சென்றாலும் குடும்பத்தை கவனிக்காமல் எந்த நேரமும் போதையில் இருந்து வந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாரீஸ்வரி, தன் நோயையும் பொருட்படுத்தாமல் மகனுக்காக அப்பகுதியில் வீட்டு வேலைக்கு சென்று பழனிகுமாரை கவனித்து வந்தார்.

வாரத்திற்கு இருமுறை தன் மகன் பழனிகுமாரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வாடகை ஆட்டோவில் அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சமீப காலமாக ஆட்டோவில் மகனை அழைத்து செல்வதற்கு போதிய பணம் இல்லாமல் அவசிரமப்பட்டு வந்தார் மாரீஸ்வரி. இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு  கூட்டத்தில் தனது மனவளர்ச்சி குன்றிய மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு இருசக்கர வாகனம் வேண்டும் என்று கோரி மனு அளித்திருந்தார்.
.
மாரீஸ்வரியின் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவருக்கு நிச்சயம் உதவி செய்வதாக வாக்கு அளித்திருந்தார். அதன்படி தனது சொந்த செலவில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி அதனை பழனிக்குமார் அமரும் வகையில் வடிவமைத்து புதனன்று அந்த வாகனத்தை மாரீஸ்வரியிடம் வழங்கினார். அதோடு தான் வாங்கி கொடுத்த வாகனத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞர் பழனிக்குமாரை அமரவைத்து வளாகத்தில் ஓட்டிக் காட்டினார் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments