'உன் மகனால் உன் உயிருக்கு ஆபத்து! 'போலி ஜோதிடரால், வாய் பேச முடியாத சிறுவனை கொன்ற தந்தை

0 7011
கொலையான சிறுவன் சாய் சரண், தந்தை ராம்கி

உன் மகனால் உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று போலி ஜோதிடர் ஒருவர் கூறியதை கேட்டு மகனை தீ வைத்து கொளுத்தியதில் சிறுவன் பரிதாபமாகப் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் என்பவரது மகன் ராம்கிக்கும் காயத்ரி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாய் சரண் என்ற மகன் இருந்துள்ளான். சாய் சரண் பிறந்ததிலிருந்தே சரிவர வாய் பேச முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அப்பா, அம்மா, மாமா என்று மட்டுமே சாய் சரணால் பேச முடிந்துள்ளது. மருத்துவர்களிடத்தில் காட்டி சிகிச்சை பெற்றும் சிறுவனுக்கு பேச்சு வரவில்லை என்று கூறப்படுகிறது. மகன் சரி வர பேசாத காரணத்தினால், தந்தை ராம்கி கோபத்தில் இருந்துள்ளார்.

மேலும், இதை காரணம் காட்டி மனைவி மற்றும் மகனை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், காயத்ரி தன் மகனை தன் சகோதரி வீட்டில் அவ்வப்போது தங்க வைத்துள்ளார். இந்த நிலையில், ஜோதிடர் ஒருவரிடத்தில் தன் எதிர்காலம் குறித்து ராம்கி கேட்டுள்ளார். அந்த ஜோதிடரோ,' உன் மகனால்தான் உனக்கு இவ்வளவு பிரச்னைகள். நீ தொடங்கும் எந்த முயற்சிகளும் வெற்றி பெறாது. அவனால், உன் உயிருக்கு கூட ஆபத்து' என்று கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கூறியுள்ளார்.

இதனால், பயந்து போன ராம்கி முன்பை விட அதிகமாக குடித்து விட்டு, மனைவி, மகனை கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், மனிதன் என்ற படத்தில் அமாவாசை தினத்தில் பிறந்த மகனால் குடும்பத்துக்கு ஆகாது என்று கருதி ரஜினிகாந்தை அவரின் தந்தை ஒதுக்கி வைப்பது போல ராம்கியும் தன் மகனை ஒதுக்கி வைத்துள்ளார். இதனால், தன் மகனை தன் உறவினர்கள் வீட்டில் வைத்து தாயார் காயத்ரி தந்தையிடமிருந்து காப்பாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், பிப்ரவரி 27 ஆம் தேதி காயத்ரியிடம் தகராறில் ஈடுபட்ட ராம்கி, அருகிலிருந்த சிறுவன் சாய்சாரண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீ பற்றியதில் சிறுவன் சாய்சரண் வலியால் துடித்துள்ளான். தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து சிறுவனை நன்னிலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் சிறுவனை காப்பாற்ற போராடியும் பலனில்லை. நேற்று காலை சிறுவன் பரிதாபமாக மரணமடைந்து விட்டான். இதையடுத்து, சிறுவனின் தந்தை ராம்கியை கைது செய்த போலீஸார் , கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரிடத்தில், தந்தை ராம்கி கொடுத்த வாக்குமூலத்தில் , ஜோதிடத்தை நம்பி மகனை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக மூடநம்பிக்கையால் பெற்றோரே தங்கள் குழந்தைகளை கொல்லும் சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. ஆந்திராவில் தாய், தன் இரு மகள்களையும் கேரளாவில் தாய் தன் இளைய மகனையும் கொலை செய்த அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறின. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஜோதிடத்தை நம்பி தந்தையே மகனை கொன்றுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments