பிறந்த நாய்குட்டியை தாய்போல் வளர்த்து வரும் ஆண் குரங்கு... ஆச்சரியத்துடன் பார்க்கும் கிராம மக்கள்
கடலூர் அருகே கடந்து 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று பிறந்த சில நாட்களேயான நாய்குட்டியை தாய் போல் வளர்த்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமம் உள்ளது. அங்கு கடந்த 10 நாட்களாக ஆண்குரங்கு ஒன்று பிறந்த சில நாட்களேயான நாய்குட்டியை வளர்த்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
குரங்கிடமிருந்து நாய் குட்டியை பிரிக்க அந்த கிராம மக்கள் தொடர்ந்து முயற்சி செய்தனர். ஆனால் அந்த குரங்கு ஒரு நிமிடம் கூட கீழே விடாமல் வைத்து பத்திரமாக பாதுகாத்து வருகிறது. அதையும் மீறி நாய்குட்டியை குரங்கிடமிருந்து பிரிக்க யாராவது அருகே சென்றால் கோபத்தோடு சீறும் குரங்கு, நாய்குட்டியை கையில் அரவணைத்துக் கொண்டு மரங்களின் உச்சிக்கு எடுத்து சென்று விடுகிறது. நாய் எங்கே கீழே விழுந்து விடுமோ என்று மக்கள் பதைபதைக்கின்றனர். தாயை பிரிந்து குரங்கின் பராமரிப்பில் இருக்கும் நாய்குட்டி எப்படி ஆரோக்கியமாக உள்ளது என்று மக்களிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வாயில்லா ஜீவன்களின் அன்பு என்றும் விநோதமானது. சமயத்தில் அவைகளின் அன்பு நம்மை ஆச்சரியப்படுத்தி விடும். நாய்குட்டியை தாய்போல் அரவணைத்து பார்த்து வரும் ஆண்குரங்கின் இந்த அன்புசெயல் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வாயில்லா ஜீவன்களின் உயரிய பாசத்தைக் காண மக்கள் பலரும் மேல்புளியங்குடி கிராமத்திற்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
Comments