ஆட்டநாயகன் வீரருக்கு அஞ்சு லிட்டர் பெட்ரோல் பரிசு... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
போபாலில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட வீரருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் சாமானிய மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, விலை உயர்வால் அவதியுறும் மக்களை கவர்வதற்காக கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பள்ளி அருகே பெட்ரோல் பங்கில் பள்ளி மாணவ, மாணவிகள் தனது பெற்றோருடன் வந்து 10 திருக்குறள்களை ஒப்புவித்தால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறளை ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருக்குறளை சரியாக ஒப்புவித்து 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெட்ரோலை வாங்கி சென்றனர். மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில், மணமக்களுக்கு பெட்ரோல் கேனை பரிசாக வழங்கிய சம்பங்களும் நடந்தது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் போபாலில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்று நடைபெற்று வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்பட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சலாவுதீன் அப்பாஸி என்ற கிரிக்கெட் வீரர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவருக்கு வழக்கமாக வழங்கப்படும் கோப்பைக்கு பதிலாக 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது.
அத்தியாவசியமான எரிபொருளான பெட்ரோல், டீசலின் விலை நாளுக்கு நாள் சதத்தை நெருங்கும் வேளையில், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு அளிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Comments