தி.மு.க கூட்டணியில் தீவிரமடையும் பேச்சுவார்த்தை.!
தொகுதி பங்கீடு தொடர்பாக இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இதில் அடுத்த இரு நாட்களில் உடன்பாடு ஏற்படுமென காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் கடந்த பல தேர்தல்களில் போட்டியிட்ட தொகுதிகளை விட அதிகமான இடங்களை, கேட்டதாகவும், திமுக அதற்கு சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறினார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை செயலாளர் சுப்புராயன், முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்றார். மீண்டும் புதன்கிழமை இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்திருப்பதன் காரணமாக, கூட்டணி கட்சிகள் கேட்கும் அதிக தொகுதிகளை ஒதுக்க மறுப்பதால் தொகுதி பங்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட வலியுறுத்தப்படுவதாலும், உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஆவதாக சொல்லப்படுகிறது.
Comments