பாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர் புகார்..!
பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியை காரில் ஏற வைத்து சினிமா பாட்டு பாடச்சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ராஜேஷ் தாசுக்கு எதிராக பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளிக்காமல் இருக்க, 3 மாவட்டங்களின் எஸ்பிக்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் 15பேர் தடுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த 21ந் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தன்னுடன் வருமாறு கூறி காரில் ஏற்றி ராஜேஸ் தாஸ் அழைத்து சென்றுள்ளார்.
கார் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும்போது வசதியாக அமருமாறு கூறி தலையணை உள்ளிட்டவற்றை பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, டிஜிபி ராஜேஸ் தான் கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பாட்டுப்பாடுமாறு பெண் ஐபிஎஸ் அதிகாரியை ராஜேஸ் தாஸ் வலியுறுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி அவரும் கண்களை மூடிக்கொண்டு 20 நிமிடங்கள் வரை பாட்டுப்பாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டு பாடி முடித்தவுடன் வாழ்த்து தெரிவிப்பதுபோல் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கைகளை பிடித்து ராஜேஸ் தாஸ் சீண்டலில் ஈடுபட்டதாக சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளது.
அத்துடன் தான் பாதுகாப்பு பணியில் இருந்த போது தனக்கே தெரியாமல் தன்னை புகைப்படம் எடுத்த ராஜேஸ் தாஸ் அதனை தன்னிடம் காரில் வைத்து காட்டியதாகவும் பெண் ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார். இதனிடையே கார் உளுந்தூர் பேட்டை வந்தவுடன் உயரதிகாரிகள் இருந்ததால் தன்னை ராஜேஸ் தாஸ் விட்டுவிட்டதாக பெண் அதிகாரி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
பாலியல் சீண்டலுக்கு ஆளான பிறகு மறுநாள் ராஜேஸ் தாஸ் மீது உள்துறை செயலாளரிடம் புகாரளிக்க செல்வதாக ஐ ஜி ஜெயராமனிடம் தான் தெரிவித்துவிட்டு சென்னை புறப்பட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் ராஜேஸ் தாஸ் தன்னை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் செல்போனை தான் எடுக்காததால் தனக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாஉல்ஹக், திருப்பூர் எஸ் பி திஷா மிட்டல், கடலூர் எஸ் பி அபினவ் ஆகியோரும் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டதாகவும் தான் அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்றும் பெண் அதிகாரி கூறியுள்ளார்.
பிறகு எஸ்பிக்கள் ஜியா உல்ஹக், திஷா மிட்டல், அபினவ் ஆகியோரை தான் தொடர்பு கொண்ட போது, ராஜேஸ் தாசுக்கு எதிராக புகார் அளிக்க வேண்டாம் என்று மூன்று பேரும் தன்னை கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் மனதளவிலும், குடும்ப வாழ்க்கை அளவிலும் தான் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக புகாரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார்.
தகவல் அறிக்கையின் மூலம், 3 எஸ்பிக்கள், ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் என காவல்துறை அதிகாரிகள் 15பேர் ராஜேஸ் தாசுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Comments