அதிமுக - தேமுதிக இடையே இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு
அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ள அதிமுக, பாஜகவுடன் விரைவில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய உள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அமைச்சர் தங்கமணியுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சட்டப்பேரவையில் தேமுதிகவிற்கு 11 தொகுதிகள் வரை வழங்க அதிமுக முன்வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தேமுதிக 20 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என்று கூறியதாகவும் இதனால் உடன்பாடு ஏற்படவில்லை என்று சொல்லப்பட்டது. அதே சமயம் நேற்று அமைச்சர் தங்கமணியுடன் மறுபடியும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேமுதிகவினர் கடைசி வரை வரவில்லை.
இந்த நிலையில் அமைச்சர் தங்கமணி தரப்பில் இருந்து தேமுதிக தரப்பிற்கு மறுபடியும் அழைப்பு அனுப்பபப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதனை ஏற்றுக் கொண்டால் இன்று மாலை அதிமுக - தேமுதிக இடையே மறுபடியும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் தேமுதிக தரப்பில் இருந்து துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments