சாலையோர சர்பத்..! மாணாக்கர்களோடு நடனம்..! ஒற்றை கையால் தண்டால்..! தமிழகத்தில் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரம்
தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சர்ச் ரோடு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அடிமைப்படுத்த நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
பின்னர், அகஸ்தீஸ்வரம் சென்ற ராகுல் காந்தி, மறைந்த எம்.பி. வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினரை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து பிரச்சாரத்திற்கு இடையே இளைப்பாறும் விதமாக அச்சன்குளத்தில் சாலையோர கடையில் ராகுல் காந்தி நுங்கு மற்றும் சர்பத் அருந்தினார்.
தக்கலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அங்கிருந்து மிளகுமூடு செல்லும் வழியில் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி அருகில் இருந்த பேக்கரிக்கு சென்று அங்கிருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடி ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினார்.
பின்னர், மிளகுமூடு பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ராகுல் காந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து, மிளகுமூடு பகுதியில் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் கலந்துரையாடிய ராகுல் காந்தி, மாணவிகளோடு சேர்ந்து நடனம் ஆடினார்.
பின்னர், மாணவி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தண்டால் எடுத்து அங்கிருந்தவர்களை ராகுல் காந்தி உற்சாகப்படுத்தினார். மாணவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடலில் போது, ஜப்பானிய தற்காப்பு கலையான Aikido என்ற கலையை ராகுல் காந்தி செய்து காட்டி மாணவன் ஒருவரை திணற வைத்தார்.
Comments