வீட்டை அபகரித்த மகன்... பறவைக் கூண்டில் பரிதவிக்கும் பெற்றோர்
சென்னை பல்லாவரம் அருகே கடனை அடைக்க வங்கியில் லோன் வாங்கித் தருவதாக ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு தங்களை கொடுமைப்படுத்துவதாக மகன் மீது பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அண்ணாநகர் முதல் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால் - சந்திரலேகா தம்பதி. இவர்களுக்கு சுடலை குமார் என்ற ஒரு மகனும் இரண்டு 2 மகள்களும் உள்ள நிலையில், மூவருக்கும் திருமணம் செய்து வைத்ததில் கடன் சுமை அதிகரித்துள்ளது.
கடனை அடைப்பதற்கு வங்கியில் லோன் வாங்கித் தருவதாகக் கூறிய மகனை நம்பி கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டுப் பத்திரத்தை கொடுத்திருக்கிறார் கோபால். தனக்கு 70 வயது ஆவதால் வங்கியில் லோன் தரமாட்டார்கள் என நம்பவைத்து, வீட்டை மகன் சுடலைகுமார் தன் பெயருக்கு தான செட்டில்மெண்ட் பதிவு செய்துகொண்டதாகக் அவர் கூறுகிறார்.
திருமணத்துக்கு வாங்கிய கடன்களை அடைத்துவிட்டு, உங்களையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன் என மகன் கூறியதால் வீட்டுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட கோபால், தனது மகள்களையும் கையெழுத்திட வைத்திருக்கிறார்.
கோபால் வீட்டிலுள்ள இரண்டு போர்ஷன்களில் இரண்டு குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். வீட்டின் முன்பகுதியில் சிறிய கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் கோபால். வீடு தன் பெயருக்கு மாறியதும் அங்கு குடியிருந்தவர்களை காலி செய்ய வைத்த சுடலை குமார், கடையையும் இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தை கார் பார்க்கிங்காக பயன்படுத்தி வருகிறார் என்கின்றனர் பெற்றோர்.
பெற்றோரையும் வீட்டை விட்டு துரத்த முயன்ற சுடலை குமார், அவர்கள் செல்ல மறுத்ததால், வீட்டு மாடியில் போதிய வசதியில்லாத, பறவைகளை வளர்க்கும் இடத்தில் தங்கவைத்துள்ளார். பல லட்சம் மதிப்புள்ள வீடு இருந்தும் அதனை மகனிடம் பறிகொடுத்துவிட்டு கூலி வேலைக்குச் செல்வதாகக் கூறும் கோபால், மகள்கள் கொடுக்கும் உணவை உண்டுதான் இருவரும் உயிர் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார்.
வீட்டை விட்டு வெளியேற மறுப்பதால், தனது நண்பர்கள், ரௌடிகளை விட்டு சுடலைகுமார் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. தங்களை தற்கொலைக்குத் தூண்டும் வகையில் ஆபாசமாக, அருவருப்பாக பேசுவதாகவும் கோபால் - சந்திலேகா தம்பதி வேதனையுடன் கூறுகின்றனர். மகன் குறித்து கேட்டபோது, கோபாலின் மனைவி சந்திரலேகா பேச முடியாமல் கண்கலங்கினார்.
வீட்டை தங்களிடம் மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் தம்பதியர் மனு அளித்துள்ளனர். பெற்றோரின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சுடலைகுமார், தங்கைகள் இருவருக்கும் 10 லட்ச ரூபாய் கடன் வாங்கி திருமணம் செய்ததோடு, 5 லட்ச ரூபாய்க்கு நகைகள் செய்து போட்டதாகக் கூறுகிறார்.
அந்தக் கடன்களை அடைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்தே, பெற்றோரும் தங்கைகளும் வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதித் தந்ததாகவும் அவர் கூறுகிறார்.
இருப்பினும் இன்றைய தேதியில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை பதினைந்து லட்சம் கடனுக்கு பெற்றோர் எழுதிக் கொடுக்க சம்மதித்திருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வயதான தம்பதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு......
Comments