நேற்று கலைஞர் நாளை ஸ்டாலின் அப்புறம்... துரைமுருகன் சூசகம்!
இலட்சிய தலைவரின் எழுச்சி நாள் என்ற தலைப்பில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை பெருவள்ளூரில் நடைபெற்றது. அதில் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், இந்த வருடம் திமுக தலைவரின் பிறந்த நாள் விழாவாக கொண்டாடுகிறோம். அடுத்த ஆண்டு தமிழக முதல்வராக மாறிய முக. ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவோம். மறைந்த திமுக தலைவர் கலைஞர், தான் இளமையாக இருந்த போது ஸ்டாலின் அளவிற்கு சுற்று பயணம் செய்ததில்லை என புகழ்ந்திருக்கிறார்.
அந்த அளவிற்கு உழைத்து, கலைஞரின் மகன் என்ற ஒரு சலுகையை கூட பெற்றிடாது, தொண்டர்களின் அன்பை பெற்று தலைவரானவர் திமுக தலைவர் ஸ்டாலின் என துரை முருகன் புகழாரம் சூட்டினார்.
கருணாநிதி இறப்பிற்கு பிறகு கழகத்தை நமத்து போகாமல் காப்பாற்றி வருவதாகவும், அண்ணா ராஜ்யசபா உறுப்பினர் ஆன பிறகு தான் டெல்லி அண்ணாவை அறிந்து கொண்டது. முதலமைச்சர் ஆன பிறகு தான் கலைஞரை டெல்லி புரிந்து கொண்டது. ஆனால், திமுக தலைவர் என்ற பதவியில் இருந்து கொண்டே ஸ்டாலின் டெல்லியை அதிர வைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
என்னோடு தோழனாக இருந்தவர், இப்போது என் தலைவனாகி இருக்கிறார். என்னை வளர்த்தவரின் மகனை, எனது தோளில் தூக்கி சுமக்க நான் ஒருபோதும் வெட்கபட்டது இல்லை எனவும் கூறினார்.
மேலும், நேற்று கலைஞர் அமைச்சரவையிலும் இருந்தேன், நாளை முக ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பேன் அதன் பின்னர் உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன் என தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி வருகிறது.
இதன் மூலம் திமுக-வின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என திமுக பொது செயலாளர் துரை முருகன் சூசகமாக பேசியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments