தேனி : வீட்டுகடன் பூராத்தையும் கட்டி முடிச்சுட்டேன்... ஆனாலும் வீடு ஏலம் போயிருச்சு... நடுத்தெருவில் நிற்கும் பெண்!!
தேனி அருகே வீட்டுக்கடன் செலுத்திய பின்பும் வங்கி வீட்டை ஏலம்விட்டதாக கூறி வங்கி முன்பு பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியை அருகே உள்ள திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி . இவரது கணவர் கருப்பையா அதேப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
முத்துலட்சுமி தனக்கு சொந்தமான இடத்தில், வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2011 ஆம் ஆண்டு தனது வீட்டில் முதல் தளம் கட்டுவதற்காக 5 லட்ச ரூபாயை தேனியில் உள்ள யூகோ வங்கியில் வீட்டுக்கடனாக பெற்றுள்ளார்.
மாதம் மாதம் தேதி தவறாமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வந்துள்ளார். இப்படி 7 லட்சம் வரை வங்கியில் முத்துலட்சுமி பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முத்துலட்சுமிக்கு வங்கி நிர்வாகம் எந்த ஒரு தகவலும் அளிக்காமல் வீட்டை ஏலம் விட்டதாக கூறி, வங்கி முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முத்துலட்சுமியை மீட்டு தேனி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல்துறையினர், முத்துலட்சுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், தான் 5 லட்ச ரூபாய் வரை வீட்டுக்கடன் பெற்றதாகவும், வட்டியோடு சேர்த்து ஏழு லட்சம் ரூபாயை கட்டியதாகவும் தெரிவித்தார். 5 லட்சம் கடன் பெற்றதற்கு ஏற்கனவே கூடுதலாக 2 லட்சம் கட்டியுள்ள நிலையில், மேலும் 5 லட்சம் கட்ட வேண்டும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் வங்கியில் இருந்து எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி வீட்டை அதிகாரிகள் ஏலம் விட்டனர். இதனால் தன்னுடைய வீட்டை மீட்டுத்தர வேண்டும் என கூறி வங்கி முன்பு தற்கொலைக்கு முயன்றதாகவும் முத்துலட்சுமி தெரிவித்தார்.
இதுகுறித்து வங்கி மேலாளர் நவீண்நாயக் , முத்துலட்சுமி குடும்பத்தினர், கடன் தவணையை சரிவரக் கட்டாமல் இருந்ததாகவும், முறையாக நோட்டீஸ் அனுப்பிய பின்பு தான் வீடு ஏலத்திற்கு விடப்பட்டது என தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் குறித்து தேனி காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கி அலுவலக வளாகத்திலேயே பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments