விடிய விடிய சமைக்கப்பட்ட பிரியாணி... முனியாண்டிக்கு படைத்து வழிபாடு..!
தமிழகத்தில் உள்ள முனியாண்டி ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விடிய விடிய பிரியாணி சமைத்து அதிகாலையில் பக்தர்களுக்கு வழங்கி வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழாவை விமர்சையாக கொண்டாடினர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது முனியாண்டி விலாஸ்கள். காரச்சாரமான சுவைமிகுந்த அசைவ உணவை சாப்பிட விரும்புவோரின் முதல் தேர்வாக இருப்பது முனியாண்டி ஹோட்டல்கள் தான். இந்த முனியாண்டி ஹோட்டல் உருவான வரலாறு மதுரையில் இருந்து தொடங்குகிறது. மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி கோவில் தான் தமிழகமெங்கும் முனியாண்டி விலாஸ்கள் உருவாக காரணமாக இருந்துள்ளது.
அதாவது 1937ம் ஆண்டு வடக்கம்பட்டியை சேர்ந்த குருசாமி நாயுடு என்பவர் விவசாயம் பொய்த்து போன நிலையில் காரைக்குடிக்கு சென்று ஒரு ஹோட்டல் தொடங்கியுள்ளார். முதன் முதலில் தொடங்கப்பட்ட ஹோட்டலுக்கு தனது குலதெய்வமான முனியாண்டி பெயரை வைத்துள்ளார். காரைக்குடியில் முதன் முதலாக தொடங்கப்பட்ட முனியாண்டி விலாஸில் கோழிக்கறி குழம்பு, மீன் வறுவல், மட்டன் பெப்பர் ப்ரை என காரச்சாரமாக உணவுகள் வழங்க அப்பகுதி முழுவதிலும் பிரபலமானது. வாய்க்கு ருசியாக காரச்சாரமான அசைவ உணவு வேண்டுமென்றால் முனியாண்டி விலாஸிற்கு செல்ல வேண்டும் என்று பேசும் அளவுக்கு குருசாமியின் அசைவ உணவு இருந்தது.
குருசாமியை தொடர்ந்து தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குலதெய்வமான முனியாண்டி பெயரிலேயே ஹோட்டல்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் முனியாண்டி விலாஸ் என்றாலே தனி அடையாளம் காணப்பட்டது. தென்னிந்தியா முழுவதிலும் 1500க்கும் மேற்பட்ட உணவகங்கள் முனியாண்டி விலாஸ் பெயரில் இயங்கி வருகின்றன. இதனிடையே தமிழகம் முழுவதிலும் முனியாண்டி விலாஸ் தோன்ற காரணமாக இருந்த வடக்கம்பட்டி முனியாண்டி சாமிக்கு ஆண்டிற்கு ஒருமுறை பிரியாணி திருவிழா நடத்தி அனைத்து முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களும் பங்கேற்பது வழக்கம்.
இந்த நிலையில் வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் 86வது பிரியாணி திருவிழா தொடங்கியது. தைமாதம் 2வதுவெள்ளியன்று நடைபெறும் இந்த திருவிழாவில் ஆந்திரா, கேரளா கர்நாடகா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கின்றனர். மாலையில் ஆடல் பாடல், கிராமிய நடனம், வாணவேடிக்கை என தொடங்கிய திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஆடு மற்றும் கோழிகள் பலியிட்டு பிரியாணி சமைக்கப்பட்டது. காணிக்கையிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகள், 2500 கிலோ அரிசி ஆகியவற்றை கொண்டு பெரிய சட்டிகளில் கமகமவென இரவில் பிரியாணி சமைக்கப்பட்டது.
இரவு முழுவதிலும் தயாரான பிரியாணி இரவு 2 மணியளவில் முனியாண்டி சாமிக்கு படைக்கப்பட்டது. அதன் பிறகு 2 மணியில் இருந்து அதிகாலை வரை பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பிரியாணி திருவிழாவில் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் பங்கேற்பதை ஒட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள முனியாண்டி விலாஸ்களுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments