ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்; பட்டாசு வெடித்ததில் எம்.ஜி.ஆர் சிலை தீப்பற்றி எரிந்தது!
திருப்பத்தூர் அருகே மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எம்.ஜி.ஆர் சிலை எறிந்ததையடுத்து அதிமுகவினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கெஜல்நாயக்கண்பட்டி பகுதியில் திமுக தொண்டர்கள் அவரது தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாட ஊர்வலம் சென்றுள்ளனர். அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டதில் அங்கு இருந்த எம்ஜிஆர் சிலை மீது பட்டாசில் இருந்து தீப் பொறி விழுந்துள்ளது. தேர்தல் விதிமுறைக்காக சிலை மீது துணி கட்டி மறைத்து வைத்திருந்ததால் துணி தீப்பற்றி எரிந்ததது. அதனை திமுகவினர் சற்றும் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர். தொடர்ந்து, எம்ஜிஆர் சிலை தீயில் எரிவதை கண்ட அந்த பகுதி மக்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
தீயால் எம்.ஜி.ஆர் சிலை சேதமடைந்த தகவலறிந்த அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் எம்.ஜி.ஆர் சிலை எரிய காரணமாக இருந்த நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது , 'நாங்கள் செய்தது தவறு தான் நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம். அதோடு சேதமடைந்த எம்.ஜி.ஆர் சிலையையும் நாங்கள் சீர் செய்து கொடுக்கிறோம் ' என்று அவர்கள் வாக்குறுதி அளித்தனர். தொடர்ந்து, சாலை மறியல் செய்த அதிமுகவினர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments