”அன்று கைகொட்டி சிரித்தவர்கள் இன்று கைதட்டுகிறார்கள்”! விதியை மதியால் வென்ற மதுரை விவசாயி

0 7188

வாழை நாரிலிருந்து கயிறு தயாரித்து அதன்மூலம் கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுப்பட்டு வரும் மதுரையைச் சேர்ந்த முருகேசனை கடந்த மாதம் மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இயற்கை கழிவாக செல்லும் வாழை நார்களைக் கொண்டு பைகள், கூடைகள் தயாரிக்கும் பணிகளைச் செய்து வருகிறார் மதுரை மேலக்கால் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன்(52). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரான முருகேசன், எட்டாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி கொண்டார். பின்னர் தந்தையோடு சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

தொடர்ந்து விவசாயத்தில் ஏறபட்ட நஷ்டம் காரணமாக வேறு பாதையில் செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த 2009 ஆம் ஆண்டு வாழை நார்களை கொண்டு கயிறு தயாரித்து அதன்மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் இறங்கியுள்ளார். மேலும் வாழைக் கழிவுகளில் இருந்து கயிறு தயாரிக்க நான்கு வகையான இயந்திரங்களை உருவாக்கி, அதில் மூன்று இயந்திரத்திற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார். இந்த கண்டுபிடிப்பு தான் கடந்த மாதம் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமரை தொழில்முனைவோரான விவசாயி முருகேசனை பாராட்ட தூண்டியுள்ளது.

image

மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "முருகேசனின் கண்டுபிடிப்பு கழிவுகளை அகற்றும் பிரச்சினையை தீர்ப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு புதிய வருமான வழிகளை அடையாளம் காணவும் தூண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார். இதுகுறித்து பேசிய முருகேசன், பிரதமரிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றதில் மகிழ்ச்சியை அளிக்கிறது அதே வேளையில், கடுமையாக உழைப்பதற்கும், நாடு முழுவதும் உள்ள பல விவசாயிகளுக்கு இத்தகைய வாழவாதாரம் அளிக்கக்கூடிய தொழில்முறைகள் குறித்து பயிற்சி அளிப்பதற்கும் ஊக்கமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “வாழை நாரை ஒரு பொருளாக விற்க முடியாது என்பதால் அதில் இருந்து கயிறுகளை உருவாக்கி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக பல்வேறு வீட்டு கைவினைப் பொருட்களை தயாரிக்க முடிவு செய்தேன். அப்போது பலராலும் ஏளனம் செய்யப்பட்டவன் இப்போது எல்லோராலும் பாராட்டப்படுகிறேன். 2011 ஆம் ஆண்டில் வெறும் 6 தொழிலாளர்கள் செயல்பட்ட நிறுவனத்தில் இப்போது 80 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்” என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார் முருகேசன்.

ஒரு தொழிலில் தோற்றுவிட்டால் உடனே சோகப்பாட்டு பாடி விதி வலியது என்று நொந்து கொள்பவர்கள் மத்தியில், தோல்வியிலும் வித்தியாசமாக யோசித்தால் அந்த வலிய விதியையும் வெல்லலாம் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாய் மாறியுள்ளார் தொழில்முனைவோரான விவசாயி முருகேசன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments