கோவாக்சின் தடுப்பூசி.. பிரதமருக்குப் போடப்பட்டது..!
கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சத்தையும் தயக்கத்தையும் போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 16ஆம் நாள் தொடங்கிய முதற்கட்டத் தடுப்பூசி இயக்கத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்துத் தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 60 வயதைக் கடந்தோருக்கும், பிற நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் இயக்கம் இன்று தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் கட்டணத்திலும் தடுப்பூசி போடப்படுகிறது.
மூன்றாம் கட்டச் சோதனை முடியுமுன்பே தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கி விட்டதாகப் பலரும் தெரிவித்தனர். இந்த அச்சத்தையும் தயக்கத்தையும் போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா அவருக்குத் தடுப்பூசி செலுத்தினார். இது குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர், கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த நமது மருத்துவர்களும் அறிவியலாளர்களும் குறுகிய காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Comments