சிங்காரச் சென்னையாக மாற்றுவோம்... மு.க.ஸ்டாலின் சூளுரை..!

0 2024
சிங்காரச் சென்னையாக மாற்றுவோம்... மு.க.ஸ்டாலின் சூளுரை..!

திமுக ஆட்சி அமைந்ததும், அசுத்தமாக மாறியிருக்கும், சீர்மிகு சென்னை பெருநகரம், சிங்கார சென்னையாக மீண்டும் மாற்றப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரை அடுத்த எஸ்ஆர்பி டூல்ஸ் அருகே, ஓ.எம்.ஆர்-ஐ ஒட்டியுள்ள YMCA மைதானத்தில், திமுகவின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவினரும், பொதுமக்களும், பெண்களும், திரளாக பங்கேற்றனர். இந்த பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுடன் கலந்துரையாடி, வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை பெருநகரம் குப்பையாக காட்சியளிப்பதாக குற்றம்சாட்டினார். குப்பைகளை முறையாக அகற்றாமல், அதற்கு வரி போட்ட நிலையில், திமுக எதிர்த்ததும், அது வாபஸ் பெறப்பட்டதாக, மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

எனவே, வருகிற மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததும், சென்னை பெருநகரம், தூய்மையான நகரமாக மாற்றப்பட்டு, மீண்டும் கலைஞர் ஆட்சியில் இருந்ததுபோல், சிங்காரச் சென்னையாக மாற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முதலீடுகளுக்கும் ஜிஎஸ்டி தடையாகவே மாறியிருப்பதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் தொழில்வளம், திமுக ஆட்சி அமைந்ததும், உடனடியாக மீட்டெடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும், போக்குவரத்து தொழிலாளர்களின் பணப் பலன்கள் முறையாக வழங்கப்படும் என்றும், குறைந்த கட்டணத்தில் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

கலைஞர் கருணாநிதி ஆட்சியில் ஒருமுறை கூட பேருந்து கட்டணம் உயர்த்தபடவில்லை என்பதையும், மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். வீட்டுக்கு விளக்காகவும், நாட்டுக்கு தொண்டனாகவும் தாம் இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments