மாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..! நகைக்காக அரங்கேறிய கொலை
சென்னையில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடிக்கச் சென்று பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் போலீசில் சிக்கியுள்ளது.
தாம்பரத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் பிடிபட்ட அந்த மூவரையும் விசாரிக்கும்போது, கொலை சம்பவப் பின்னணி வெளியாகியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜெயந்தி என்ற பெண்ணும் அவரது மகள் மோனிகாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த இருவர், மோனிகாவை கத்தியால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றுள்ளனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்து மகளை காப்பாற்ற முயன்ற ஜெயந்தியை உடல் முழுவதும் 41 இடங்களில் குத்திக் கொலை செய்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தபோது, தாம்பரம் பகுதியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற 4 சவரன் நகைத் திருட்டு தொடர்பாக புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பழைய கொள்ளையன் வெள்ளை அந்தோனியும் கூட்டாளி பாலாஜி என்பவனும் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் விசாரிக்கும்போதுதான் அமைந்தகரை கொலையில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்தக் கொலை தொடர்பான அதிர்ச்சி தரும் பின்னணியும் தெரியவந்தது.
கொலையான ஜெயந்தி வீடு இருக்கும் பகுதியில் செல்லப்பா என்பவன் தங்கி இருந்துள்ளான்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய செல்லப்பா ஜெயந்தியின் மாமியார் 80 வயதான மூதாட்டி நிறைய நகைகளை அணிந்து செல்வதை கவனித்துள்ளான்.
அந்தோணியிடமும் பாலாஜியிடமும் மூதாட்டியிடம் நகைகளை பறிக்க திட்டம் போட்டு கொடுத்துள்ளான் செல்லப்பா. சம்பவதன்று மூதாட்டி வெளியில் சென்றுவிட, ஜெயந்தியின் வீட்டிற்குள் புகுந்த இருவரும் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
செல்லப்பாவை கைது செய்து விசாரித்தபோது, தாம் பாட்டியிடம் இருந்த நகையைத்தான் திருடச் சொன்னதாகவும் அவர்கள் தவறுதலாக ஜெயந்தி வீட்டுக்குள் நுழைந்துவிட்டதாகவும் அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
Comments