பிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..!

0 6549
பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிரேசில் நாட்டுச் செயற்கைக்கோள் அமேசானியா 1 அதன் சுற்றுவட்டப்பாதையில் கொண்டு விடப்பட்டது.

பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிரேசில் நாட்டுச் செயற்கைக்கோள் அமேசானியா 1 அதன் சுற்றுவட்டப்பாதையில் கொண்டு விடப்பட்டது. 

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழியாமல் கண்காணிக்கவும், பன்முக வேளாண்மை தொடர்பான பகுப்பாய்வுக்காகவும் அந்நாட்டு விஞ்ஞானிகள் அமேசானியா 1 என்னும் செயற்கைக் கோளை உருவாக்கியுள்ளனர். 637 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் பணியை இந்திய விண்வெளித்துறையின் கீழுள்ள நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் பெற்றது. இந்த நிறுவனம் முதன்முறையாக வணிகநோக்கில் பிரேசில் நாட்டுச் செயற்கைக்கோள், இந்தியாவின் 5 செயற்கைக்கோள்கள், அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள் ஆகியவற்றையும் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திட்டமிட்டபடி சரியாக இன்று பகல் 10.24 மணிக்கு 19 செயற்கைக்கோள்களையும் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட் விண்ணில் பாய்ந்த 17 நிமிடங்களில் அதில் இருந்து அமேசானியா 1 செயற்கைக்கோள் தனியாகப் பிரிந்து அதன் சுற்றுவட்டப் பாதையில் சென்றது. அதையடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மற்ற 18 செயற்கைக் கோள்களும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சுற்றுப்பாதைக்குச் சென்றன. சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, திருப்பெரும்புதூர் ஜேப்பியார் தொழில்நுட்ப மையம், கோவை ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களும் இவற்றில் உள்ளன. ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பிரேசில் நாட்டு அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மார்க்கஸ் சீசர் பான்டிஸ் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கு வந்திருந்து இந்தச் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படுவதைப் பார்வையிட்டார்.

பிரேசில் நாட்டில் உருவாக்கப்பட்ட அமேசானியா 1 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியதற்கு இந்தியாவும் இஸ்ரோவும் மிகவும் பெருமிதம் அடைவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments