அ.தி.மு.க. கூட்டணியில்.. பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள்..!
அதிமுக கூட்டணியில், பாமகவிற்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை, எவை என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மனுத்தாக்கலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால், தொகுதி பங்கீடு, போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வில், அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.
இதில், ஆளும் அதிமுக, தனது கூட்டணி கட்சிகளுடன், தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக - பாமக இடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில், நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக சார்பில், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பாமக சார்பில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு அதிமுக, பாமக நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுடனான தொகுதி உடன்பாடு குறித்து அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில், பாமகவும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்தார். எந்தெந்த தொகுதிகளில் பா.ம.க. போட்டியிடும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் வெற்றியை பெறும் என்றார்.
Comments