கமல்ஹாசன் : நான் தான் முதல்வர் வேட்பாளர்... நோ காம்ப்ரமைஸ்!
முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு முதலில் கூட்டணி முடிவு செய்யப்பட வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் கூறியிருந்த நிலையில், நான் தான் முதல்வர் வேட்பாளர் என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது கூட்டணி கட்சிகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் பட்டியல் என அனைத்து கட்சிகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சமக தலைவர் சரத்குமார் அறிவித்தார்.
இந்தநிலையில், தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயகக் கட்சியும் மக்கள் நீதி மையம் அலுவலகத்தில் கமலஹாசனை சந்தித்து கூட்டணியில் இணைந்தனர். அதன் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, உங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு "எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை முதலில் முடியவேண்டும். அதன் பிறகு தான் முதல்வர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்படும் என கூறினார். மேலும், அதிமுகவுடன் 10 ஆண்டு காலமாக தொடர்ந்து பயணித்த சமகவை அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அழைக்கவில்லை. இருப்பினும் மக்கள் பணியை எந்த வித தொய்வில்லாமல் செய்யவேண்டும் என்பதற்காக அங்கிருந்து வந்து விட்டோம் என தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னைத்தான் கட்சி சார்பில் முடிவு செய்துள்ளார்கள், அது அவ்வாறே இருக்கும் என்றார். மேலும் நாங்கள் 'காம்ப்ரமைஸ்'க்கு பேர் போனவர்கள் அல்ல என்றும், நல்லவற்றை மட்டுமே காம்ப்ரமைஸ் செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டணி இறுதி செய்யப்பட்டால் தான் சொல்ல முடியும் என சமக தலைவர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மநீம தலைவர், தான் தான் முதல்வர் வேட்பாளர் என கூறியுள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments