போலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பியான கதை..!
காற்றைக்கிழித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு வேகம் கொண்ட ஹீமா தாஸ் அஸ்ஸாம் மாநிலத்தில் இளம் டிஎஸ்பியாக பதவி ஏற்றதும் தனது அம்மாவின் கனவை கூறி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தார்.
விளையாட்டு ஆர்வலர்களால் திங் எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான் இந்த ஹிமா தாஸ். அசாம் மாநிலத்தின் நாகவோன் மாவட்டத்தில் உள்ள திங் என்ற கிராமத்தில் ரோஞ்சித் தாஸுக்கும், ஜோனாலி தாஸுக்கும் நான்காவது மகளாக பிறந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்த ஹிமாதாஸ் 16 வயது வரை நெல்வயலில் வெறுங்காலில் புட்பால் விளையாடிக் கொண்டிருந்தார். களத்துமேட்டில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியான ஹிமாதாஸின் உடல்வாகுவையும், அவரது பலத்தையும் பார்த்து வாயடைத்த உடற்பயிற்சியாளர் சம்சூல் திறைமைக்கு எல்லைகள் இல்லை என்பதை உணர்ந்து ”நீ ஆட வேண்டியது ஃபுட்பால் கிடையாது. உனக்கான ஆடுகளம் தடகளம் தான்” எனக்கூறி ஹிமாவின் பாதையை மாற்றியமைத்தார்.
அதன்பிறகு மாவட்ட அளாவிலான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் போட்டிகளில் பங்கேற்று கலக்கிய ஹிமாவின் வேகத்தால் அசந்து போன அசாம் மாநில விளையாட்டு கழக இயக்குனரும், தடகள பயிற்சியாளருமான நிப்பான் தாஸ், வயல்வெளியில் ஓடிக் கொண்டிருந்த ஹீமாவிற்கு முறையாக பயிற்சி அளித்து பட்டைத்தீட்ட தலைநகர் கவுஹாத்திக்கு அழைத்து சென்றார். சரியாக 18 மாத பயிற்சி மட்டுமே எடுத்த ஹிமாதாஸ் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் மீறி, 2018ம் ஆண்டு ஃபின்லாந்தில் நடைபெற்ற 20வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று இந்தியாவின் பெயரை நிலை நாட்டினார். தங்கம் வென்றதும் உலக அரங்கில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்க வாயசைத்து பாடும் ஹிமாவின் கண்களின் கண்ணீர் வழிந்தது. காரணம் சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற சரித்திர வரலாற்றை படைத்த தருணம் அது.
போட்டியின் போது துப்பாக்கி சுடப்பட்டதும் முதலில் குறைந்த வேகத்தில் ஓடும் ஹிமாதாஸ் வெற்றி இலக்கை அடைவதற்கு குறிப்பிட்ட வினாடிகளுக்கு முன்பு காற்றையே கிழித்து கொண்டு ஓடும் அளவுக்கு தனது வேகத்தை அதிகரித்து இலக்கை எட்டும் சூட்சமத்தை கொண்டிருப்பவர். இதே பாணியில் தான் சர்தேச போட்டியிலும் ஹிமா தங்கம் வென்றது. வெற்றி இலக்கை அடைவதற்கு 80 மீ தொலைவுகள் இந்த போது 4வது இடத்தில் இருந்த ஹிமா சில விநாடிகளில் முன்னேறி முதல் இடத்தை தனதாக்கி கொண்டார்.
தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்ப்படுத்தி வரும் ஹிமா தாஸ் 21 வயதில் அஸ்ஸாம் மாநிலத்தின் டிஎஸ்பியாக பதவி ஏற்றார். விளையாட்டுத்துறையில் சாதனை படைத்ததை அடிப்படையாக கொண்டு ஹிமா தாஸை அஸ்ஸாம் மாநிலத்தில் டிஎஸ்பியாக நியமனம் செய்து அம்மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் உத்தரவிட்டார். பின்னர், காவல்துறை உடையில் கம்பீரமாக ஹிமா தாஸ் நிற்க அவரது தோல்களில் ஸ்டார்களை குத்தி, சட்ட ஒழுங்கை காக்க இளம்புயலை வரவேற்றனர் உயர் அதிகாரிகள்.
தன்னை ஒரு காவல்துறை அதிகாரியாக பார்க்க வேண்டும் என்பதே தனது அம்மாவின் கனவாக இருந்ததாகவும், விளையாட்டுத்துறை மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளதாகவும் மகிழ்ச்சி தருணத்தில் ஹிமாதாஸ் பகிர்ந்து கொண்டார். விடா முயற்சிக்கும் கடின உழைப்பிற்கும் எத்தனையோ சாதனையாளர்கள் முன்னுதாரணமாக இருக்க அவர்களின் வரிசையில் இந்த இளம்புயலும் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
Comments