சார்பட்டா பரம்பரை நடிகர் ஆர்யா மீது காதல் மோசடி புகார்..! ரூ.70 லட்சம் சுருட்டல்
ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழ்ப் பெண்ணை காதலிப்பதாக நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி சுமார் 70 லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் ஆர்யா மீது , இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மீது விசாரிக்க, தமிழக அரசிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் பிரபல நடிகராக இருந்து வரிசையாக படங்கள் சறுக்கியதால் 40 வயதில், நடிகை ஷாயிஷாவை திருமணம் செய்து கொண்டவர் நடிகர் ஆர்யா என்கிற ஜம்சத் ..!
தற்போது ப.ரஞ்சித் இயக்கத்தில் சர்பட்டா பரம்பரை படத்தில் பாக்சராக நடித்து வரும் ஆர்யா மீது தான் இலங்கையை சேர்ந்த தமிழ்ப்பெண் விட்ஜா காதல் திருமண மோசடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஈழத்தமிழ் பெண்ணான விட்ஜா ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார். 3 வருடங்களாக பழகிய நிலையில் விட்ஜாவுக்கு ஆன்லைன் மூலம் காதல்வலை விரித்த நடிகர் ஆர்யா அவரை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 70 லட்சத்து 40,000 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும், பின்னர், திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்றும் லாக்டவுன் நேரத்தில் படவாய்ப்புகள் இல்லை என்று பணத்தை திருப்பித்தர இழுத்தடித்ததாக குற்றஞ்சாட்டுகிறார் விட்ஜா
இதைதொடர்ந்து, நடிகர் ஆர்யா மீது ,பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன் லைன் வழியாக புகார் அளித்துள்ளார் விட்ஜா . தனக்கும் நடிகர் ஆர்யாவின் தாயாருக்கும் நடந்த வாக்குவாதங்கள், பண பரிவர்த்தனைகளுக்கான ஆதாரங்களையும் தன் புகாரில் அவர் இணைத்துள்ளார்.
விட்ஜா அளித்துள்ள புகாரில், உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்று கூறி தன்னிடத்தில் இருந்து பணத்தை பெற்றதாகவும் சில மாதங்கள் கழித்து தன்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது தனக்கு தெரிய வந்ததாகவும் இதைத் தொடர்ந்து, தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, ஆர்யாவின் தாயார் என்னை மோசமாக திட்டினார். 'ஸ்ரீலங்காகாரி நீ... உலகமெல்லாம் போய் அசிங்கப்படுறீங்க' என்று மோசமான வார்த்தைகளால் ஆர்யாவின் தாயார் தன்னை திட்டியதாகவும் தமிழப் பெண் விட்ஜா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், விட்ஜா கூறுகையில், இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகமும் ,உள்துறை அமைச்சகமும் தலையிட்டதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தற்போது, ஆர்யா மீது புகார் கொடுத்துள்ளதால், அதனை வாபஸ் பெற வேண்டும் எனவும் இல்லையேல் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், நடிகர் ஆர்யா தன்னை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் ஆர்யா எப்படி நாடகம் போட்டாலும் தனது புகாரை வாபஸ் பெறப் போவதில்லை என்றும் கடந்த சில வருடங்களாக நான் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை என்றும் விட்ஜா தெரிவித்துள்ளார். நான் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் வர வேண்டும். தனக்கு நீதியும் வேண்டும். இந்த விஷயத்தில் அக்கறை காட்டியதற்காக பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் விட்ஜா கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சக செயலாளர் கோபால் ஜா, தமிழ்நாடு முதலமைச்சரின் தனிபிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் ஐ.ஏ.எஸ்-க்கு புகாரை அனுப்பியுள்ளார். விரைவில் , தமிழக அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் விட்ஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக , 'எங்க வீட்டு மாப்பிள்ளை 'என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா தனக்கு பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார். அதில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் இருந்து தனக்கு மனைவியை தேர்வு செய்யாத நடிகர் ஆர்யா, நடிகை ஷாயிஷாவை காதலித்து திருமண செய்து கொண்டது குறிப்பிடதக்கது.
முதற்கட்ட விசாரணையில் விட்ஜாவிடம் இருந்து கடந்த 3 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக 70 லட்சம் ரூபாய் பணத்தை வெஸ்டர்ன் யூனியன் மனி டிரான்ஸ்பர் மூலம் ஆர்யா தனது மேலாளர் முகமது ஹூசைனி என்பவரது வங்கி கணக்கில் பெற்றது உறுதியாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த புகார் குறித்து விளக்கம் பெற ஆர்யாவை தொடர்பு கொண்ட போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
படத்தில் காதலிக்க தெரியாத மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு நடிக்கிற ஹீரோங்க, நிஜத்தில் ஊருக்கு 10 பேர காதலிச்சி பணத்தை கறந்து விட்டு சுற்றலில் விடுவதாக விபரம் அறிந்த திரைஉலகினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
Comments