குளிர்ச்சி தரும் பனை நார் கட்டில்... மீண்டும் இயற்கைக்கு திரும்பும் ராமநாதபுரம் மக்கள்

0 55675

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கட்டில்களை தவிர்த்து மீண்டும் பனை நார் கட்டில் பயன்பாட்டிற்கு பொதுமக்கள் மாறி வருவது அதனை தயாரித்து வரும் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

"கற்பக விருட்சம்" என்று அழைக்கப்படும் பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனைமரத்தின் வேர் பகுதி முதல் உச்சி பகுதி வரை பல்வேறு பயன்கள் நிறைந்து காணப்படுகிறது. அதிலிருந்து பதநீர், நுங்கு, கிழங்கு என உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. பனை மரத்தடிகள் வீடுகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர பனைமரத்தின் ஓலை, மட்டை என அதன் அனைத்து பாகங்களுமே கைவினைப் பொருட்கள், பெட்டி, பாய், கட்டில் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன. அதிலும் குறிப்பாக, பனைமட்டை நாரிலிருந்து பின்னப்படும் கட்டில் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

பச்சை பனை ஓலையை வெட்டி அதன் மட்டையிலிருந்து உரித்து எடுக்கப்பட்ட நாரை நீரில் ஊற வைத்து பின்னப்பட்ட கட்டில்களை முன்பெல்லாம் பல வீடுகளில் காணமுடிந்தது. தற்போது நாகரீக மோகத்தால் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் கட்டில்களின் பயன்பாடு அதிகரித்ததால் நார் கட்டில்களின் பயன்பாடு சுருங்கிவிட்டது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் நார் கட்டில் கட்டும் தொழிலில் பனைத் தொழிலாளர்கள் பலர் பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அதன் பயன்களை அறிந்த பலரும் மீண்டும் பாரம்பரிய பழமைவாய்ந்த பனை நார் கட்டில்களுக்கு மாறி வருகின்றனர்.

இதுகுறித்து நார்க்கட்டில் பின்னும் தொழிலாளி பாண்டியன் கூறும்போது, பனைமரத்தின் மட்டையிலிருந்து நார் எடுத்து அதை பதப்படுத்தி தண்ணீரில் ஊறவைத்து பின் வடிவமைத்து, கட்டில், ஊஞ்சல் சேர், டிரைவர் சீட், உள்ளிட்ட தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்துகிறோம். கடந்த காலங்களில் அதிகம் பயன்பட்டுவந்த பனை நார் கட்டில் பின்னர் நாகரீகம் கருதி தவிர்த்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பனை நார் கட்டில்களை செய்ய ஆர்டர் கொடுக்க இந்த பகுதி மக்கள் முன்வருகின்றனர். எனவே, இதன் மூலம் ஓரளவு நிரந்தர வருமானம் கிடைப்பதாகவும் கூறுகிறார் பாண்டியன்.

உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் அளிக்கக் கூடிய பனை நார் கட்டிலின் மகத்துவத்தை யாராலும் மறுக்க முடியாது. இன்றும் சாயல்குடி போன்ற ஒரு சில கிராமங்களில் பனை நார்களை கொண்டு கட்டில்களை பின்னும் தொழிலில் ஈடுபட்டு, பல குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. எனவே பனைமரங்களை பாதுகாத்து, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பனை நாரில் பின்னப்பட்ட கட்டில்களை மக்கள் பயன்படுத்தினால், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் குடும்பங்களின் எதிர்கால வாழ்வு ஒளிமயமாகும். அதே நேரத்தில் வரும் கோடைக்காலத்தில் கொளுத்தும் வெயில் சூட்டில் இருந்து தப்பித்துக் கொள்ள சிறந்த முதலீடாகவும் அமையும் என்பதும் மறுக்க முடியாத உண்மை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments