மண்டபத்தில் கொள்ளையில் ஈடுபட்ட ஊர்க்காவலன் மகன்.... கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்!

0 1915

மதுரை அருகே திருமண மண்டபத்தில் ஒலிபெருக்கி உபகரணங்களை திருடும் போது மாட்டிக்கொண்ட திருடனை, மந்தையில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எம்.மீனாட்சிபுரம் கிராமத்தில், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் செல்வம் என்பவருக்கு சொந்தமான ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்தது.

அதிகாலை 4 மணி அளவில் ஆட்கள் யாரும் இல்லாததை அறிந்து, மண்டபத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி உபகரணமான ஆம்ப்ளிபயர்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முற்பட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒலிபெருக்கி உரிமையாளர் செல்வம், ஆம்ப்ளிபயர்களை மர்மநபர் தூக்கிச் செல்வதை கண்டு திருடன் திருடன் என்று கூச்சலிட்டபடி ஓடியுள்ளார்.

ஆள் வருவதை கண்ட மர்ம நபர், ஆம்ப்ளிபயர்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் அவனை செல்வம் துரத்திப் பிடிக்க, சத்தம் கேட்டு எழுந்து வந்த கிராம மக்கள், ஓடி வந்து திருடனைப் பிடித்தனர். பின்னர் அவரை கிராமத்து மந்தையில், கட்டிவைத்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்தனர்.

இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர், டி.கல்லுப்பட்டி அருகே வையூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் என்பதும், அவர் ஒலிபெருக்கி ஆப்ரேட்டர் என்பதும் தெரியவந்தது.

மேலும் திருடனையும் அவரின் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த திருமங்கலம் காவல் துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி உபகரணங்களை திருடர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் மீனாட்சிபுரம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments