தமிழக முதல்வரின் ’ஆல் பாஸ்’ அறிவிப்பு... பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவர்கள்
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாததால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்தாண்டு டிசம்பர் வரை பள்ளிகள் திறக்கப்படாமல் வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதியும், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வியாழனன்று சட்டப்பேரவையில் உறையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்குவதாக அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 9, 10, 11ஆம் வகுப்பு பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்டவர் மாணவ மாணவிகள் பள்ளி வளாகம் முன்பு பட்டாசுகளை வெடித்தும், ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். மேலும் பள்ளி மாணவ,மாணவிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
Comments