தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், பல்வேறு நகரங்கங்களில் 50 சதவீதம் அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகர பேருந்துகளில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் அரசு பேருந்துகளை நம்பியுள்ள பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 222 பேருந்துகளில் 10 பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. தற்காலிக பணிபுரிய ஓட்டுநர், நடத்துனர் தேவை என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கரூரில் 100 சதவீதம் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பயணிகள் காத்திருந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால், திருச்சி மாநகரில் இயங்கி வந்த 938 அரசு பேருந்துகளில், 50 சதவீத பேருந்துகளே தற்போது இயக்கப்படுவதால், பொதுமக்கள் காத்திருக்கும் நிலைமை நீடிக்கிறது. அதே நேரத்தில், 310 தனியார் பேருந்துகளும் வழக்கம் போல், முழு அளவில் இயங்கி வருகின்றன.
Comments