ராசியான மோடி ஸ்டேடியம்; ஈஸியா முடிஞ்ச மேட்ச்... இந்திய அணி அபார வெற்றி !

0 11287

 அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியைப் பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்திய அணியில் முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். கிராவ்லி, சிப்லி இருவரும் இங்கிலாந்தின் முதல் இன்னிங்சை தொடங்கினர். சிப்லி ரன் ஏதும் எடுக்காமல், தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ரோகித் ஷர்மாவிடம் பிடிபட, ரசிகர்களின் ஆரவாரத்தில் ஸ்டேடியம் குலுங்கியது. அதனைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, அக்சர் படேல் - அஷ்வின் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

image

இந்திய பந்துவீச்சில் அக்ஷர் பட்டேல் 6 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 மற்றும் இஷாந்த் 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர். இங்கிலாந்து அணி 38 ரன்னுக்கு கடைசி 8 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 57 ரன்னுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

image

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஹானே 7 ரன்னிலும், ரோகித் சர்மா 66 ரன்னிலும் ஜேக் லீச்சில் பந்தில் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 145 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். அதனைத்தொடர்ந்து 33 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால் மீண்டும் அக்ஸர் பட்டேல், அஸ்வின் சுழன்றடிக்கும் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி 81 ரன்னில் சுருண்டது. அக்ஷர் பட்டேல் 5, அஷ்வின் 4, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

image

81 ரன்னில் இங்கிலாந்து சுருண்டதால் இதன் மூலம் இந்திய அணிக்கு 49 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் முன்னதாக தலா 1 போட்டிகளில் வென்ற நிலையில் இந்த 3வது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி 2 - 1 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

image

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் இரண்டாவது நாளிலேயே இந்திய அணி தனது அபார வெற்றியை பதிவு செய்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல்நாளில் 13 விக்கெட்களும், 2வது நாள் 17 விக்கெட்களும் இந்த மைதானத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 1945ம் ஆண்டுக்கு பிறகு குறைவான பந்துகளில் முடிந்த டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments