தொடரும் ஃப்ரீ பையர் பரிதாபங்கள்...கதறி அழும் பெற்றோர்
தூத்துக்குடி மாவட்டத்தில், ஃப்ரீ பையர் விளையாடுவதைத் தாய் கண்டித்ததால், மகன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் , ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. கணவனை இழந்த இவர், விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவ தொடங்கியதும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்துவந்தன. இந்நிலையில், 10 ஆம் வகுப்பு படிக்கும் தன் மகன் உதயக்கண்ணனின் படிப்பிற்காக செல்போன் வாங்கிக்கொடுத்துள்ளார் அவனது தாய் ஜெயலட்சுமி.
ஆனால், தாயின் கடின உழைப்பைப் பொருட்படுத்தாமல், செல்போனில் தினமும் பலமணி நேரம் உதயக்கண்ணன் ஃப்ரீ பையர் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் நேரத்தை வீணடித்ததால் மகன் உதயக்கண்ணனை ஜெயலட்சுமி திட்டியுள்ளார். அதன்பின் வெளியே சென்ற உதயக்கண்ணன், பல மணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப் போன ஜெயலட்சுமி, எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஜெயலட்சுமி கூறுகையில், அரசு இதுபோன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், காணாமல்போன தன் மகனை மீட்டு தர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
Comments