மாவோயிஸ்ட் தாக்குதலில் மதுரையை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் மரணம்... ஊருக்கு வந்துவிட்டு சென்றவருக்கு நடந்த துயரம்!
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாலுச்சாமி என்ற பாதுகாப்பு படை வீரர், சத்தீஸ்கர் அருகே நக்சல்களுக்கு எதிரான தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.
மதுரை பொய்கைக்கரைப் பட்டியைச் சேர்ந்தவர் லஷ்மணன். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அதில் மூன்றாவது மகன் 31 வயதாகும் பாலுச்சாமி. இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்தோ திபெத்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். பஞ்சாப், அஸ்ஸாம், ஆந்திரா, சட்டீஷ்கர் போன்ற மாநிலங்களிலும் இவர் பணிபுரிந்துள்ளார்.
லஷ்மணனுக்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்று, தற்போது ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. விடுமுறையில் கடந்த ஒரு மாதமாக சொந்த ஊரில் இருந்தவர், சில நாள்களுக்கு முன்னர்தான் பணிக்குத் திரும்பியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வரையிலும் குடும்பத்தினருடன் போனில் இயல்பாக பேசியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை இந்திய - திபெத்திய எல்லைப் பகுதியில் நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே மோதல் நடைப்பெற்றுள்ளது.
அப்போது நக்சல்கள், இந்திய வீரர்களின் பாதையில் கண்ணி வெடிகளை வைத்துள்ளனர். எதிர்பாராவிதமாக கண்ணிவெடியில் சிக்கி பாலுச்சாமி வீரமரணம் அடைந்தார். மற்ற வீரர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த சகவீரர்கள், இத்தகவலை பாலுச்சாமியின் குடும்பத்திற்குத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலுவின் குடும்பத்தினர், சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
உடற்கூராய்வு முடிந்தவுடன் பாலுச்சாமியின் உடல் பெங்களூரு எடுத்துவரப்படவுள்ளது. அங்கிருந்து இன்றிரவு தரைவழியே மதுரை பொய்கைகரைப்பட்டிக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
தாய் நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணித்த பாலுச்சாமியின் மறைவால் பொய்கைக்கரைப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Comments