'சமாதானமாக போய் விடுங்கள்!'- செங்கல்பட்டு செக் போஸ்டில் பெண் எஸ்.பி காரை வழிமறித்த உயர் அதிகாரிகள்

0 209205
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ்

சிறப்பு டி.ஐ.ஜி ரஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மூன்று உயரதிகாரிகள் தடுக்க முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 21 ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது, முதல்வருடன் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசும் பாதுகாப்புக்காக சென்றிருந்தார். பணிகள் முடிந்து ராஜேஷ் தாஸ் மீண்டும் சென்னைக்குத் திரும்பும் போது , மாவட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துள்ளனர். அப்போது, பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் தனியாகப் பேச வேண்டும் என்று காரில் ஏற்றிய ராஜேஷ்தாஸ் அவரிடம் ஆபாசமாகப் பேசி தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், பதற்றமடைந்த அந்த பெண் அதிகாரி உடனே காரை நிறுத்த சொல்லிவிட்டு கோபமாக இறங்கிச் சென்று விட்டார்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறை செயலாளரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கூடுதல் முதன்மை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஐ.ஜி ஒருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது, மீண்டும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, குற்றச்சாட்டுக்குள்ளான ராஜேஷ்தாஸ் மாவட்ட எஸ்.பியாக பணியிலிருந்த போதே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பாலியல் புகாரில் சிக்கிக் காத்திருப்பு பட்டியலுக்கு வைக்கப்பட்டுள்ள டிஜிபி ராஜேஸ்தாஸுக்கு ஆதரவாக சென்னையில் சில போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி கடந்த 22 ஆம் தேதி புகார் கொடுக்க சென்னைக்கு காரில் வந்துள்ளார். இதை அறிந்த ராஜேஷ் தாஸ் ஆதரவு எஸ்.பி ஒருவர் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அதிரடிப் படை காவலர்கள் மூலம் பெண் எஸ்.பி வந்த காரை மறித்துள்ளனர். பின்னர், புகாரளிக்க வேண்டாம் என்று கூறி சமாதானப்படுத்தி திருப்பியனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  பெண்.எஸ்.பியின் கார் சாவியையும் எடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும், அந்த பெண் அதிகாரி தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதையடுத்து, மற்றோரு உயரதிகாரி ஒருவரும் டி.எஸ்.பி ஒருவரும் பெண் எஸ்பியிடம்  சமாதானமாக போகுமாறு  வற்புறுத்தியுள்ளனர். இதில், டி.எஸ்.பி ரேங்கில் உள்ளவர் டி.ஜி.பியை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று பகிரங்கமாக எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் ராஜேஸ் தாஸுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் பெயரையும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உள்துறை செயலாளரிடமும் தமிழக டி.ஜி.பியிடமும் கொடுத்துள்ளார். இதனால், சமாதானம் பேசிய மூன்று அதிகாரிகளும் விசாகா கமிட்டியின் விசாரணை வளையத்துக்குள் சிக்கவுள்ளனர்.

முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் ரகசியமாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தும் அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தடுத்து விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments