தன் கட்சித் தலைவரிடமே பொய் கூறியவர் நாராயணசாமி..! - பிரதமர் மோடி கடும் தாக்கு
புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மீனவர் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தவில்லை என்றும், கூட்டுறவுத் துறையைச் சரியாகக் கையாளவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, புதுச்சேரியில் 5 ஆண்டுகளாக மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும், நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததால் இப்போது மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் காங்கிரசு அரசு நிர்வாகச் சீர்கேடு நிறைந்ததாக இருந்ததாகவும், கடல்சார் திட்டங்கள், மீனவ திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என்றும் குறைகூறினார். சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு பெண் அரசைக் குறை கூறிய போது, அதை மறைத்த நாராயணசாமி அவரது கட்சித் தலைவரிடம் பொய் பேசியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர், லடாக்கில் கூட உள்ளாட்சித் தேர்தலை நடத்தியுள்ளபோது புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை காங்கிரசு அரசு நடத்தவில்லை எனத் தெரிவித்தார்.
மீன்வளத்துறைக்குத் தனி அமைச்சகம் அமைக்கவில்லை எனக் காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதாகவும், 2019ஆம் ஆண்டிலேயே மீனவ மக்களுக்கு அமைச்சகம் அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், காங்கிரசின் வாரிசு அரசியல் முறைக்கு முடிவு கட்டப்பட்டு முற்போக்குச் சிந்தனை கொண்டதாக இந்தியா உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொழில் வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகியவற்றில் சிறந்த மாநிலமாகப் புதுச்சேரியை உருவாக்க பாஜக விரும்புவதாகக் குறிப்பிட்டார். முந்தைய காங்கிரஸ் அரசு கூட்டுறவுத் துறையைச் சரியாகக் கையாளவில்லை எனக் குறைகூறிய பிரதமர், கூட்டுறவுத் துறைக்குப் புத்துயிரூட்ட பாஜக விரும்புவதாகத் தெரிவித்தார்.
Comments