புதுச்சேரியின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு அனைத்து வழிகளிலும் உதவும்: பிரதமர் மோடி

0 2275
புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களால் சாலைப் போக்குவரத்து வசதிகள் மேம்படும்: பிரதமர் மோடி

புதுச்சேரி மக்கள் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்வதாகவும், புதுச்சேரியில் புரட்சியாளர்கள் பலர் தோன்றியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியைத் துணை நிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை, தலைமைச் செயலர் அஸ்வினி குமார் ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து காரில் பிரதமர் மோடி ஜிப்மர் வளாகத்துக்குச் சென்றார். ஜிப்மர் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான நால்வழிச்சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். காரைக்கால் ஜிப்மரில் 491 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வளாகம் கட்டவும், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைக்கவும், புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் 400 மீட்டர் நீளத்துக்குச் செயற்கைப் புல் ஓடுதளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.

புதுச்சேரி ஜிப்மரில் 28 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையம், விளையாட்டு வீராங்கனைகளுக்காக லாஸ்பேட்டையில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கைகளுடன் கூடிய விடுதி, புதுச்சேரி கடற்கரை சாலையில் கட்டப்பட்டுள்ள மேரி கட்டிடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி மக்கள் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்வதாகவும், புதுச்சேரி மண் பன்முகத்தன்மையின் அடையாளமாக உள்ளதாகவும், இங்கிருந்து ஏராளமான புரட்சியாளர்கள் தோன்றியுள்ளதாகவும் தெரிவித்தார். புதிய உட்கட்டமைப்புத் திட்டங்களால் சாலைப் போக்குவரத்து வசதிகள் மேம்படும் என்றும், உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளால் மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை மும்மதங்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களான திருநள்ளாறு, நாகூர், வேளாங்கண்ணி ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வரப் பொதுமக்களுக்கு உதவும் எனத் தெரிவித்தார்.
"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை" என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டி மாணவர்களுக்குக் கல்விதான் சிறந்த செல்வம் எனக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments