தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்: அமைச்சர் அறிவிப்பு
நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அனைத்துப் பேருந்துகளும் வழக்கம் போல இயங்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 சங்கங்கள் தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரண தொகையாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனாலும் அதனை ஏற்க மறுத்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், போக்குவரத்து தொழிலாளர்களுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை முடியும் வரை போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 1000 ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அனைத்து பேருந்துகளும் இயங்கும் என்று குறிப்பிட்ட அவர், மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதனிடையே போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே விடுப்பு விண்ணப்பித்தவர்களும் இன்று கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
Comments