வரலாறு காணாத அளவிற்கு உயரும் காப்பரின் விலை.... என்ன செய்ய போகிறது இந்தியா?
உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை பற்றி பேசுபவர்கள் ஏனோ வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வரும் கனிமங்களின் விலையை பற்றி பேச மறந்துவிட்டோம். அப்படி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வரும் கனிமங்களில் ஒன்று தான் காப்பர் எனப்படும் செம்பு.
உலகளவில் தென் அமெரிக்க நாடான சிலி மற்றும் பெருவில் தான் அதிகளவிலான காப்பர், சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இவற்றுக்கு அடுத்தபடியாக சீனா உள்ளது. சீனா காப்பர் உற்பத்தியில் முன்னணி வகித்தாலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் காப்பரை இறக்குமதி செய்து கொள்கிறது
இங்கிலாந்தில் உள்ள தொழில்துறை உலோகங்கள் வர்த்தகத்திற்கான உலக மையம் எல்.எம். இயில் தற்போது ஒரு டன் காப்பர் $8,806அமெரிக்க டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்போ ஒரு டன் காப்பரின் விலை $7,755 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது $8,806 அமெரிக்க டாலருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் பல நாடுகளுக்கு காப்பர், சின்க் போன்ற கனிமங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக சீனா இங்கிருந்து அதிகளவிலான காப்பரை, டன்கணக்கில் இறக்குமதி செய்து வருகிறது. காப்பர் மீது சீனாவிற்கு அளவு கடந்த அன்பு அதிகரிக்க காரணம் ஏராளம் உள்ளன. மின்னணு பொருட்கள் சந்தையில் காப்பரின் தேவை அதிகம் . அதேப்போல கட்டுமானத்துறை, மருத்துவ துறை என பல்வேறு துறைகளில் காப்பரின் தேவை அதிகம் உள்ளது. இதனால் தான் அதிகளவில் காப்பரை நோக்கி பயனிக்கிறது சீனா. இப்படி அதிகளவில் காப்பரை இறக்குமதி செய்தும் , உற்பத்தி செய்தும் மற்ற நாடுகளில் காப்பருக்கு ஒரு வித செயற்கை தட்டுப்பாட்டை சீனா உருவாக்குகிறது என்றே சொல்லலாம். அதேப்போல அமெரிக்காவும் காப்பரின் தேவையை உணர்ந்து காப்பர் உலோக உற்பத்தியில் ஈடுப்பட்டு வருகிறது.
இப்படி உலக நாடுகள் பல காப்பருக்காக போட்டி போட்டுக்கொண்டிருக்கையில், இந்தியா என்ன செய்கிறது என்ற கேள்வி எழலாம். மனிதனால் உருவாக்காப்பட்ட முதல் உலோகமான காப்பரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்தியா அதிகளவில் ஏற்றுமதி செய்து வந்தது . ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
இந்தியாவில் காப்பர் உற்பத்தியில் முன்னிலையில் இருப்பவை மூன்றே நிறுவனங்கள் தான். ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ. இரண்டாவது இடத்தில் ஸ்டெர்லைட், மூன்றாவது இடத்தில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மட்டும் வருடத்திற்கு 4 லட்சம் டன் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அதாவது இந்தியாவின் மொத்த காப்பர் தேவையில் 41 சதவீதத்தை நிறைவு செய்தது ஸ்டெர்லைட் நிறுவனமே.
முன்ன ஒரு காலத்துல நாங்கலாம் யாரு தெரியுமா என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் இருந்து அதிகளவில் காப்பர் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போதோ மற்ற நாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் காப்பர் ஆலைகள் மூடப்பட்டதும் ஏற்றுமதி குறைந்ததற்கான முக்கிய காரணியாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உயர்ந்து வரும் காப்பர் விலையால் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை சந்திந்து வருகிறது.
கட்டுமானத்துறை, மருத்துவத்துறை, மின்னனு பொருட்கள் துறை என அனைத்திலும் காப்பரின் தேவை அதிகரித்து கொண்டிருக்கையில், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் காப்பரின் விலையையும், காப்பரின் தேவையையும் சமாளிக்க இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Comments